News

Follow Us

கர்நாடக மாநிலத்தில் நிலவி வரும் ஹிஜாப் பிரச்சினைக்கு அம்மாநில முதலமைச்சர் சித்தராமையா முற்றுப்புள்ளி வைத்துள்ளது பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

 

கர்நாடக மாநிலத்தில் பள்ளி மற்றும் கல்லூரியில் பயின்று வரும் இஸ்லாமிய மாணவிகள் மத அடையாள உடையான ஹிஜாப் அணிந்து வரக்கூடாது என்று உத்தரவு பிறப்பித்தது. கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் பிறப்பிக்கப்பட்ட இந்த உத்தரவின் போது பா.ஜ.க. தலைமையிலான ஆட்சி நடைபெற்று வந்தது. இதற்கு முஸ்லிம் மாணவிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து ஹிஜாப் அணிவது எங்கள் உரிமை என்று வாதங்களை முன்வைத்தனர்.

 

இதைத்தொடர்ந்து முஸ்லிம் மாணவிகள் சார்பில் கர்நாடக உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்ட நிலையில், ஹிஜாப் அணியக்கூடாது என்று அரசு உத்தரவிட்டது செல்லும் என்று தீர்ப்பு அளிக்கப்பட்டது. 

 

இந்த உத்தரவை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீட்டு வழக்கு தொடரப்ப்ட நிலையில், இதனை விசாரித்த 5 பேர் அடங்கிய நீதிமன்ற அமர்வில், 3 நீதிபதிகள் கர்நாடக உயர்நீதிமன்றத்தில் தீர்ப்பை இறுதி செய்த நிலையில், மற்ற 2 நீதிபதிகள் மாணவிகளுக்கு ஆதரவாக தீர்ப்பு அளித்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

 

இதனால் பள்ளி மற்றும் கல்லூரி மாணவிகள் ஹிஜாப் அணிந்து வர தடை விதிக்கப்பட்டது உறுதி செய்யப்பட்டது. எனவே இன்று வரையில் பள்ளி, கல்லூரி மாணவிகள் ஹிஜாப் அணிந்து வர தடை அமலில் உள்ளது.

 

இந்நிலையில் கர்நாடகாவில் ஆட்சியமைத்த காங்கிரஸ் தலைமையிலான அரசின் முதலமைச்சர் சித்தராமையா நேற்று (டிச.22) மைசூர் அரண்மனை வளாகத்தில் நடைபெற்ற மலர் கண்காட்சியை தொடங்கி வைத்தார். அந்த நிகழ்ச்சியில் அவர் பேசும்போது, ‘‘கர்நாடகத்தில் கடந்த பா.ஜ.க. ஆட்சியில் கொண்டு வரப்பட்ட ஹிஜாப் தடை சட்டம் கொண்டுவரப்பட்டது. உச்சநீதிமன்றம் வரையில் மாணவிகள் சென்று வாதாடியும் அவர்களுக்கான ஆதரவு கிடைக்கவில்லை. என்ன உடை அணிய வேண்டும்? என்ன உணவு சாப்பிட வேண்டும் என்பது தனிப்பட்டவர்களின் உரிமை. ஆடை அணிவதன் அடிப்படையில் மக்களை வேறுபடுத்தி பிரித்து பார்க்கக் கூடாது என்று தெரிவித்தார்.

 

மேலும் ஹிஜாப் தடையை காங்கிரஸ் அரசு வாபஸ் பெறுகிறது. பள்ளி, கல்லூரிகளுக்கு ஹிஜாப் அணிந்து வர விதிக்கப்பட்ட தடை நீக்கப்படும். இனி விருப்பமான உடைகளை அணியலாம். இதில் நான் இடையூறு செய்யமாட்டேன்’’ என்று தெரிவித்துள்ளார். இந்த அறிவிப்பு முஸ்லிம் பெண்கள் மற்றும் மாணவிகள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share via
Copy link