Share via:
நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் மீது கொடுத்த புகாரை வாபஸ் வாங்குவதாக நடிகை விஜயலட்சுமி பகிரங்கமாக பேட்டி அளித்துள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நடிகை விஜயலட்சுமி, நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளரான சீமான் தன்னை திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி ஏமாற்றிவிட்டதாகவும், 7 முறை கருக்கலைப்பு செய்யத் தூண்டியதாகவும் கடந்த 2011ம் ஆண்டு போலீசில் புகார் அளித்த நிலையில் பேச்சு மூச்சு இல்லாமல் போனது.
அதைத்தொடர்ந்து மீண்டும் கடந்த மாதம் சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் அளித்து பரபரப்பை ஏற்படுத்தினார். நடிகை விஜயலட்சுமி விவகாரம் குறித்து நேரில் ஆஜராகுமாறு சீமானுக்கு வளசரவாக்கம் போலீசார் 2 முறை சம்மன் அனுப்பியும் அவர் ஆஜராகவில்லை. அதற்கு மாறாக தனது வழக்கறிஞரை அனுப்பி வைத்து விளக்கம் அளித்தார்.
இந்நிலையில் நடிகை விஜயலட்சுமி, நள்ளிரவு நேரத்தில் சென்னை வளசரவாக்கம் போலீஸ் நிலையத்திற்கு வந்து சீமான் மீது தான் கொடுத்த புகாரை எழுத்துப்பூர்வமாக வாபஸ் வாங்குவதாக தெரிவித்தார்.
புகாரை வாபஸ் வாங்கிய பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பரபரப்பான பேட்டி ஒன்றை அளித்தார். அதில், ‘‘என்னுடைய புகார் மீதான நடவடிக்கையில் எந்த முன்னேற்றமும் இல்லை. காவல்துறை நடவடிக்கை எடுக்கவில்லை. தனிஒரு வராக போராட என்னால் முடியவில்லை. சீமானை எதிர்கொள்ள எனக்கு போதிய ஆதரவு யாரிடம் இருந்தும் கிடைக்கவில்லை. யாருடைய வற்புறுத்தலின் பேரிலும் நான் புகாரை வாபஸ் பெறவில்லை. சீமானிடம் பேசினேன். வழக்கை வாபஸ் பெற்றுவிட்டேன் என்று தெரிவித்தார்.
மேலும் ‘‘சீமான் சூப்பர், அவருக்கு தமிழ்நாட்டில் முழு பவர் உள்ளது. அவர் முன்பு யாரும் ஒன்று செய்ய முடியாது. அவர் எப்போதும் நன்றாக இருக்கட்டும். நான் எனது தோல்வியை ஒப்புக் கொண்டு செல்கிறேன்’’ என்று பகிரங்கமாக பேட்டி அளித்தார்.