Share via:
தேர்தலுக்கு முன்பாக திமுகவிடம் அடம் பிடித்து ஒரு மாநிலங்களவை
உறுப்பினர் சீட் வாங்கிய காங்கிரஸ், இப்போது தவெகவிடம் மீண்டும் ஒரு எம்.பி. சீட் வாங்கியிருக்கிறது.
காங்கிரஸ் கட்சிக்குக் கிடைத்த யோகத்தைப் பார்த்து அத்தனை கட்சிகளும் அதிர்ந்து நிற்கின்றன.
சி.வி.சண்முகத்தின் ராஜினாமாவால் காலியாக இருக்கும் அந்த ஒரு மாநிலங்களவை
இடத்துக்கு வரும் ஜூன் 18-ம் தேதி தேர்தல் நடைபெறுகிறது. தற்போதைய சட்டப்பேரவையில்
தவெக அதிக உறுப்பினர்களைக் கொண்டுள்ளதால், அக்கட்சி ஆதரவு தரும் வேட்பாளரே எளிதில்
வெற்றி பெற முடியும்.
அதனால் தவெக சார்பில் வேட்பாளர் தேர்வு செய்யப்பட்டு முதல் முறையாக
மாநிலங்களவையில் கணக்கு தொடங்கும் என்று செய்திகள் வெளியாயின. இந்தச் சூழலில், தமிழக
முதல்வர் விஜய்யை நேற்று முன்தினம் நேரில் சந்தித்த காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரம்,
மாநிலங்களவை சீட்டை காங்கிரஸுக்கு ஒதுக்க வேண்டும் என வலியுறுத்தினார்.
:
இதன் தொடர்ச்சியாக, தமிழக காங்கிரஸ் மேலிடப் பொறுப்பாளர் கிரிஷ்
சோடங்கர் நேற்று சென்னை தலைமைச் செயலகத்தில் முதல்வர் விஜய்யை நேரில் சந்தித்துப் பேச்சுவார்த்தை
நடத்தினார்.
இந்நிலையில், தமிழக முதல்வரும் தவெக தலைவருமான விஜய் நேற்று வெளியிட்டுள்ள
அதிகாரப்பூர்வ அறிவிப்பில், “ஜூன் 18-ம் தேதி தமிழகத்தில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட
உள்ள மாநிலங்களவை உறுப்பினருக்கான தேர்தலில், தவெக தலைமையிலான கூட்டணியில் இடம் பெற்றுள்ள
அகில இந்திய காங்கிரஸ் கட்சிக்கு மாநிலங்களவை உறுப்பினர் இடம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது’’
என்று அறிவிப்பு செய்துவிட்டார்.
எம்.பி. சீட்டை இப்படி விஜய் தாரை வார்த்ததை அவரது கட்சியினரே
ஏற்றுக்கொள்ள முடியாமல் தவிக்கிறார்கள். ஏனென்றால், ஒரே ஒரு ராஜ்யசபா சீட்டை பெற தேமுதிக
பல ஆண்டுகளாக போராடியது, விசிக போராடிக்கொண்டே உள்ளது. பாமக பல ஆண்டுகளாகப் போராடிப்பெற்றது.
இந்த நிலையில் விஜய் காங்கிரஸ் கட்சிக்கு சீட் கொடுத்ததற்குப்
பின்னணியில் மிகப்பெரும் அரசியல் உள்ளதாகத் தெரிவிக்கிறார்கள். அதாவது தவெக சார்பில்
ஒருவர் எம்.பி. ஆனால், பாஜக கொண்டுவரும் மசோதாவை ஆதரிப்து அல்லது எதிர்ப்பது என்று
அரசியல் செய்தாக வேண்டும்.
பாஜகவை ஆதரித்தாலும் எதிர்த்தாலும் தவெகவிற்கு சிக்கல் வரும்.
எனவே, மோடியையும் பாஜகவையும் பகைத்துக்கொள்ளும்
எண்ணம் இல்லாமலே ஒரு எம்.பி. தொகுதியை காங்கிரஸ் கட்சிக்குத் தாரை வார்த்ததாக சொல்லப்படுகிறது.
இந்த பேச்சுவார்த்தை குதிரை பேரம் எல்லாமே தலைமைச் செயலகத்தில்
நடைபெறுவதால், இது தலைமைச் செயலகமா? அல்லது த.வெ.க கட்சி அலுவலகமா? தமிழ்நாடு அரசின்
நிர்வாக நரம்பு மண்டலமாக இருக்க வேண்டிய செயின்ட் ஜார்ஜ் கோட்டை, இன்று அதிகாரத்தின்
மரியாதையை இழந்து தவெக கட்சி அலுவலகமாக மாறிவிட்டது என்று எதிர்க்கட்சிகள் புலம்புகின்றன.