Share via:
15 ஆண்டுகளுக்கு மேலான அரசு பேருந்துகள் மற்றும் அரசு வாகனங்களின் பதிவு செல்லுபடியாகும் காலத்தை தமிழக அரசு மேலும் ஒரு வருடத்திற்கு நீட்டித்து உத்தரவு பிறப்பித்துள்ளது.
தமிழகத்தில் 15 ஆண்டுகளுக்கும் மேலாக இயங்கி வரும் பழைய வாகனங்களை பயன்படுத்துவதற்கு விதிக்கப்பட்ட தடை கடந்த ஏப்ரல் மாதம் 1ம் தேதி முதல் அமலுக்கு வந்தது. இதைத்தொடர்ந்து மாநிலத்தில் இயங்கி வரும் 15 ஆண்டுகளுக்கு அரசுத்துறையில் இயங்கி வரும் வாகனங்களின் மொத்த விவரங்களை அலுவலர்களிடம் ஒப்படைக்க வேண்டும் என்று போக்குவரத்து ஆணையர் அறிவுறுத்தியிருந்தார்.
அதன்படி அரசு பேருந்துகள், தீயணைப்பு வாகனங்கள், சுகாதாரத்துறை வாகனங்கள், ஆம்புலன்ஸ் என மொத்தம் 10,730 பழைய வாகனங்கள் இயங்கி வருவதாக தெரியவந்துள்ளது. இதில் மோசமான நிலையில் உள்ள 5,739 வாகனங்கள் அடையாளம் காணப்பட்டு முதல்கட்டமாக அவற்றுக்கு தமிழக அரசு தடை விதிக்க முடிவு செய்தது.
இருப்பினும் பொது சுகாதாரத்துறை மற்றும் பொது போக்குவரத்துத்துறை உள்ளிட்ட அத்தியாவசிய துறைகளில் ஒரே கட்டமாக ஆயிரக்கணக்கான வாகனங்கள் முடக்கப்பட்டால் அவை மக்களுக்கு கடும் சிரமத்தை உண்டாக்கும் என பல்வேறு தரப்பில் இருந்து கோரிக்கை முன்வைக்கப்பட்டது.
இந்நிலையில் 6,341 அத்தியாவசிய வாகனங்களின் பதிவை ஒரு ஆண்டு காலம் நீடித்து அதாவது வருகிற 2024ம் ஆண்டு டிசம்பர் 31ம் தேதி வரை நீட்டித்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. மேலும் இந்த காலகெடுவுக்கு பின்னர் இந்த வாகனங்களுக்கு தடை விதிக்கப்பட்டு, ஸ்கிராப் செய்யப்படும் என்றும் தமிழக அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது.