Share via:
வருமானத்திற்கு அதிகமாக சொத்துக் குவித்ததாக குற்றம் சாட்டப்பட்ட அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் கே.பி.அன்பழகன் மீதான வழக்கு இன்று விசாரணைக்கு வர உள்ள நிலையில் அவர் நேரில் ஆஜராவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் கே.பி.அன்பழகன் அ.தி.மு.க. அமைப்பு செயலாளராகவும், தருமபுரி மாவட்ட செயலாளராகவும், முன்னாள் உயர்கல்வித்துறை அமைச்சராகவும் இருந்த போது ரூ.45 கோடி வரை வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் தருமபுரி மாவட்ட தலைமை குற்றவியல் நீதிமன்றத்தில் கடந்த 2022ம் ஆண்டு ஜனவரி மாதம் 19ம் தேதி மனுதாக்கல் செய்தனர்.
அதைத்தொடர்ந்து கே.பி.அன்பழகனுக்கு சொந்தமான 53 இடங்களிலும், சேலத்தில் ஒரு இடத்திலும், சென்னையில் 3இடங்களிலும் என மொத்தம் 58 இடங்களில் அதிரடி சோதனை நடத்தினர். அப்போது ரூ.2கோடியே 87 லட்சத்து 98 ஆயிரத்து 650 ரொக்கம் மற்றும் 6.637 கிலோ கிராம் எடை கொண்ட தங்கம் மற்றும் ஆவணங்களை லஞ்ச ஒழிப்பு போலீசார் கைப்பற்றினர்.
அதன் தொடர்ச்சியாக கே.பி.அன்பழகன் மீது 10 ஆயிரம் பக்கங்கள் கொண்ட குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. இதுதொடர்பான வழக்கு இன்று (நவ.6) விசாரணைக்கு வர உள்ள நிலையில் கே.பி.அன்பழகன் நீதிமன்றத்தில் நேரில் ஆஜராவார் என்று நம்பத்தகுந்த வட்டாரத்தில் இருந்து தகவல்கள் கிடைத்துள்ளன.