Share via:
டெல்லியில் காற்று மாசு கடுமையாக அதிகரித்துள்ளதை தொடர்ந்து டெல்லியில் வங்கதேசம் இலங்கை இடையிலான உலகக்கோப்பை தொடர் குறித்து நிபுணர்களிடம் ஐ.சி.சி. ஆலோசனை நடத்தி வருகிறது.
உலகக்கோப்பை போட்டித் தொடருக்கான இன்றைய ஆட்டத்தில் வங்கதேசம்& இலங்கை அணிகள் மோதுகின்றன. டெல்லியில் நடைபெற உள்ள இந்த போட்டியில் பங்கேற்பதற்கான இருநாட்டு அணிகளும் டெல்லி வந்து சேர்ந்துள்ளனர். டெல்லியில் ஏற்கனவே காற்று மாசு அதிகரித்துள்ளதால் ஐ.சி.சி. வீரர்களின் நலன் குறித்து நிபுணர்களிடம் முக்கிய ஆலோசனை நடத்துகிறது.
கடந்த சில வாரங்களாகவே டெல்லியில் காற்று மாசு அளவு மிக அதிகமாக அதிகரித்து வருகிறது. இதனால் மக்கள் பலர் மூச்சுத்திணறல் உள்ளிட்ட பல்வேறு உபாதைகளால் அவதியடைந்து வருகின்றனர். அங்கு காற்றின் தரக் குறியீடு கடந்த 4ம் தேதி மாலை 4 மணியளவில் 415 ஆக இருந்த நிலையில் நேற்று காலை 7 மணிக்கு 460 ஆக உயர்ந்து மிகவும் மோசமான நிலையை எட்டியுள்ளது. அதேபோன்று டெல்லியில் சுற்றுவட்டாரப் பகுதிகளில் உள்ள காற்றில் தூசு, துகள்செறிவின் அளவு பி.எம்.2.5 ஆக உள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.
இதன் காரணமாக வருகிற 10ம் தேதி வரை தொடக்க பள்ளிகளை மூடுமாறு டெல்லி கல்வித்துறை அமைச்சர் அதிஷி கூறியுள்ளார். அதன்படி 6 முதல் 12ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு ஆன்லைன் மூலம் வகுப்புகள் நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.