Share via:
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சமூக வலைதளங்களில் பரவி வரும் போலி விளம்பரங்களை நம்பி மக்கள் பல கோடி ரூபாய் அளவுக்கு பணத்தை இழந்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பொது மக்கள் தற்போது ஆன்லைன் மூலம் பல பொருட்களை வாங்கி பயனடைந்து வருகின்றனர். அதிலும் பண்டிகை காலம் என்றால், ஆன்லைன் விளம்பரங்கள் அதிகளவில் குவிந்து விடுகிறது. பல்வேறு அங்கீகரிக்கப்பட்ட ஆன்லைன் விற்பனை நிறுவனங்களுடன் சேர்த்து ஒரு சில அங்கீகரிக்கப்படாத மோசடி நிறுவனங்களும் தங்களது கவர்ச்சிகரமான சலுகை விளம்பரங்களை வெளியிடுகிறது.
இதை உண்மை என்று நம்பி பொது மக்கள் ஆன்லைன் பணப்பரிவர்த்தனை மூலம் அந்த பொருட்களை ஆர்டர் செய்துவிட்டு கிடைக்காமல் போன பிறகுதான் ஏமாந்துவிட்டோம் என்று உணர்கிறார்கள்.
அந்த வகையில், டி மார்ச் காம்போ ஆபர் என்று வெளியான விளம்பரத்தை நம்பி பொது மக்கள் கோடிக் கணக்கிலான பணத்தை இழந்துள்ளது தெரியவந்துள்ளது. அதாவது ஒரு கிலோ பிஸ்தா, ஒருகிலோ பாதாம், ஒரு கிலோ காய்ந்த திராட்சை, ஒரு கிலோ முந்திரி உள்ளிட்ட 4 கிலோ உலர் பழங்கள் வெறும் 399 ரூபாய்க்கு என்று விளம்பரப்படுத்தப்பட்டு இருந்தது.
இதை உண்மை என்று நம்பிய பொது மக்கள் ஆன்லைனின் ஆர்டர் செய்துவிட்டு பணத்தையும் செலுத்தியுள்ளது தெரியவந்துள்ளது. இதுபோன்ற ஆன்லைன் ஸ்கேமில் சிக்கிக் கொள்ளாமல் இருப்பது முக்கியம் என்கிறார்கள் பொருளாதார வல்லுநர்கள்.