Share via:
தீபாவளி பண்டிகைக்கு முன்னதாகவே கலைஞர் மகளிர் உரிமைத் தொகை கிடைத்துவிடும் என்று குடும்பத் தலைவிகள் ஆர்வமாக காத்திருக்கிறார்கள்.
கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடந்த செப்டம்பர் 15ம் தேதி காஞ்சிபுரத்தில் தொடங்கி வைத்தார். இத்திட்டத்தில் பயன்பெற விண்ணப்பித்தவர்களில் 1.06 கோடி பேர் தேர்வு செய்யப்பட்டு கடந்த 2 மாதங்களாக அவர்களது வங்கிக்கணக்கில் ரூ.1,000 வரவு வைக்கப்பட்டு வருகிறது.
இதில் விண்ணப்பித்தவர்களில் 56.50 லட்சம் பேரின் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்ட நிலையில், அவர்கள் மீண்டும் மேல்முறையீடு செய்ய தமிழக அரசு வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டது. அதன்படி 11.85 லட்சம் மகளிர் மேல் முறையீடு செய்தனர். அதற்கான காலக்கெடு முடிவடைந்துள்ள நிலையில் தமிழக அரசு முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.
தீபாவளி பண்டிகை வருகிற 12ம் தேதி கோலாகலமாக கொண்டாடப்பட உள்ளது. ஒவ்வொரு மாதமும் 14 அல்லது 15ம் தேதிகளில் கலைஞர் மகளிர் உரிமைத் தொகை கிடைத்து வரும் நிலையில், இந்த நவம்பர் மாதத்தில் அதற்கு முன்பாக அதாவது தீபாவளி பண்டிகைக்கு முன்பாக உரிமைத் தொகை கிடைக்குமா? என்று கேள்வி எழுப்பி வருகின்றனர்.
தீபாவளி பண்டிகை செலவுக்கு ரூ.1,000 உரிமைத் தொகை கிடைத்தால் நன்றாக இருக்கும் என்கிறார்கள் குடும்பத் தலைவிகள். நம்பத்தகுந்த வட்டாரங்களில் இருந்து வரும் தகவலின்படி வருகிற 10ம் தேதிக்குள் வங்கிகளில் கலைஞர் உரிமைத் தொகை வரவு வைக்கப்படும் என்றும், அதற்கான பணிகளை அரசு மேற்கொண்டு வருவதாகவும் தெரியவந்துள்ளது.