Share via:
அரசு பள்ளி மாணவ, மாணவிகளுக்கு நீட் தேர்வு, ஜே.இ.இ. தேர்வுகளுக்கான பயிற்சி அளிக்கப்படும் என்று பள்ளிக் கல்வித்துறை அறிவித்துள்ளது.
மருத்துவ படிப்புக்கான மாணவர் சேர்க்கைக்கு நீட் நுழைவுத் தேர்வு கட்டாயமாக்கப்பட்டுள்ளது. அதேபோல் பொறியியல் படிப்புக்கான நுழைவுத் தேர்வில் வெற்றி பெற ஜே.இ.இ. எனும் பயிற்சியும் தேவைப்படுகிறது. ஏழை, எளிய மாணவர்களால் நீட் தேர்வுக்கு பயிற்சி பெற முடியாமல் உள்ளதால், தமிழக அரசு நீட் தேர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து அதனை ரத்து செய்ய வேண்டும் கோரிக்கை வைத்து வருகிறது.
இந்த சூழ்நிலையை தங்களுக்கு சாதகமாக்கிக் கொண்ட பல்வேறு தனியார் கல்வி நிறுவனங்கள், நீட் தேர்வு பயிற்சி மையங்களை தொடங்கின. ஆனால் இதுபோன்ற பயிற்சி மையங்களில் ஏழை, எளிய மாணவர்களால் பயிற்சி பெற முடியவில்லை.
கடந்த சில ஆண்டுகளாக அரசு பள்ளி மாணவர்களுக்கும் வாரந்தோறும் நீட் தேர்வு பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. இருப்பினும் மாணவர்களால் அந்தளவுக்கு ஜொலிக்க முடியவில்லை. இதனால் நீட் தேர்வுக்கு தீவிர பயிற்சி அளிக்க வேண்டும் என்று மாணவர்கள் தரப்பில் இருந்து அரசுக்கு தொடர் கோரிக்கைகள் எழுந்தன.
அந்த வகையில் தற்போது அரசு பள்ளி மாணவ, மாணவிகளுக்கு பள்ளி வேலை நாட்களில் வாரத்தில் 5 நாட்களும் நீட் மற்றும் ஜே.இ.இ. பயிற்சி அளிக்கப்படும் என பள்ளிக்கல்விதுறை சார்பில் அறிவிப்பு வெளியாகியுள்ளது. தினமும் மாலை 4 மணி முதல் 5.30 மணி வரையில் நீட் பயிற்சி அளிக்க உத்தரவிடப்பட்டுள்ள நிலையில் விருப்பமுள்ள மாணவர்கள் பங்கேற்கலாம் என்றும் யாரையும் வற்புறுத்தக் கூடாது என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
ஒரு பக்கம் நீட் தேர்வுக்கு எதிராக தி.மு.க. சார்பில் கையெழுத்து இயக்கம் நடத்தப்பட்டு வருகிறது. மற்றொரு பக்கம் மாணவர்களின் கோரிக்கையை ஏற்று தினந்தோறும் நீட் தேர்வு பயிற்சி வகுப்புகள் குறித்து அறிவிப்பு வெளியாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.