Share via:
மகளிர் உரிமைத் தொகைக்காக மேல் முறையீடு செய்தவர்களுக்கு வருகிற 25ம் தேதிக்குள் குறுந்தகவல் வந்துசேரும் என்று அறிவிப்பு வெளியாகியுள்ளது.
கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடந்த செப்டம்பர் 15ம் தேதி காஞ்சிபுரத்தில் தொடங்கி வைத்தார். இத்திட்டத்தில் பயன்பெற விண்ணப்பித்தவர்களில் 1.06 கோடி பேர் தேர்வு செய்யப்பட்டு கடந்த 2 மாதங்களாக அவர்களது வங்கிக்கணக்கில் ரூ.1,000 வரவு வைக்கப்பட்டு வருகிறது.
இதில் விண்ணப்பித்தவர்களில் 56.50 லட்சம் பேரின் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்ட நிலையில், அவர்கள் மீண்டும் மேல்முறையீடு செய்ய தமிழக அரசு வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டது. அதன்படி 11.85 லட்சம் மகளிர் மேல் முறையீடு செய்தனர். அதற்கான காலக்கெடு முடிவடைந்துள்ள நிலையில் தமிழக அரசு முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.
அமைச்சரவை கூட்டம் நேற்று முன்தினம் கூடிய நிலையில், கலைஞர் மகளிர் உரிமைத் தொகைக்காக மேல்முறையீடு செய்தவர்களின் திட்ட நிலை குறித்து விவாதிக்கப்பட்டது. அதைத்தொடர்ந்து மேல்முறையீடு செய்தவர்களின் விண்ணப்பங்கள் பரிசீலிக்கப்பட்டு வருவதாகவும், வருகிற 25ம் தேதி முதல் இவர்களுக்கு குறுந்தகவல் அனுப்பப்பட உள்ளதாகவும் அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேல்முறையீடு செய்தவர்கள் அனைவருக்கும் வருகிற 25ம் தேதிக்குள் குறுந்தகவல் வந்துவிடும் என்பதால் விண்ணப்பதாரர்கள் ஆர்வமுடன் காத்திருக்கிறார்கள்.