Share via:
மதுரை பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவை புறக்கணிப்பதாக தமிழக உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி திட்டவட்டமாக அறிவித்துள்ளார்.
நாளை (நவ.2) மதுரை பல்கலைக்கழக பட்டமளிப்பு விழா நடைபெற உள்ள நிலையில் தமிழக உயர்கல்வித்துறை அமைச்சர் க.பொன்முடி, தலைமை செயலகத்தில் செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.
அவர் கூறும்போது, ‘‘சுதந்திர போராட்ட வீரரும், மூத்த இடதுசாரித் தலைவருமான என்.சங்கரய்யாவுக்கு கவுரவ முனைவர் பட்டம் வழங்க சிண்டிகேட் மற்றும் செனட் தீர்மானம் நிறைவேற்றி ஆளுநருக்கு அனுப்பப்பட்டது. சங்கரய்யா தனது படிப்பை நிறுத்திவிட்டு சுதந்திரப் போராட்டத்தில் ஈடுபட்டு 9 ஆண்டு காலம் சிறையில் இருந்தவர் என்று தெரிவித்த அவர், சங்கரய்யா பற்றி ஆளுநருக்கு தெரியவில்லை என்றால் கேட்டு தெரிந்து கொள்ளட்டும் என்று தெரிவித்தார்.
தொடர்ந்து பேசிய அவர், சங்கரய்யாவுக்கு தகைசால் தமிழர் விருதை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கிய போது, விருதுடன் கொடுக்கப்பட்ட தொகையை ஏழைகளுக்கு வழங்கும்படி கொடுத்துவிட்டார் என்று பெருமிதத்துடன் தெரிவித்தார். மேலும் சங்கரய்யாவுக்கு தற்போது 102 வயதாகும் நிலையில் அவருக்கு ஏன் கவுரவ டாக்டர் பட்டம் வழங்க மறுக்கிறார் ஆளுநர் என்பதற்கு பதில் சொல்ல வேண்டும்’’ என்று காட்டமாக பேசினார்.
இப்போதெல்லாம் பட்டமளிப்பு விழாக்களில் என்னை ஆளுநர் பேசவிடுவதே கிடையாது. சிறுப்பு விருந்தினர் மட்டுமே பேச அனுமதிக்கப்படுகிறார் என்று தனது அதிருப்தி குறித்தும் பேசியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.