Share via:
வருகிற டிசம்பர் மாதத்தில் பிரதமர் மோடி தமிழகம் வர உள்ளதாகவும், ராக்கெட் ஏவுதளத்திற்கு அடிக்கல் நாட்ட உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளது.
பாம்பன் ரெயில் பாலம் கட்டப்பட்டு 100 ஆண்டுகளை கடந்த நிலையில் புதிய பாலம் கட்டுவதற்கான அடிக்கல் கடந்த 2019ம் ஆண்டு மார்ச் மாதம் 1ம் தேதி நாட்டப்பட்டது. இந்த பாலம் சிறப்பான முறையில் கட்டி முடிக்கப்பட்டுள்ள நிலையில் பிரதமர் மோடி மக்களுக்காக அதனை திறந்து வைத்து மக்களுக்காக அர்ப்பணிக்க உள்ளார்.
அதேபோல் தூத்துக்குடி மாவட்டத்தில் அமைந்துள்ள குலசேகரப்பட்டினத்தில் அமைய இருக்கும் ராக்கெட் ஏவுதளத்திற்கும் பிரதமர் மோடி அடிக்கல் நாட்ட இருக்கிறார். இந்த இரு நிகழ்வுகளில் கலந்து கொள்வதற்காக பிரதமர் மோடி வருகிற டிசம்பர் மாதம் தமிழகத்திற்கு வருகை தர உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
மேலும் இந்த பயணம் டிசம்பர் மாதம் முதல் வாரத்திலேயே மேற்கொள்ளப்படும் என்று கூடுதல் தகவலும் கிடைத்துள்ளது.
இந்த பயணத்தின் போது தமிழகத்தில் பா.ஜ.க.வுக்கு ஏற்பட்டுள்ள பின்னடைவு குறித்தும், பிரதமர் மோடி பா.ஜ.க. மாநில நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்துவார் என்றும் கூறப்படுகிறது.