Share via:
பராமரிப்பு பணிகள் காரணமாக சென்னையில் இருந்து புறநகர் பகுதிகளுக்கு இயக்கப்படும் மின்சார ரெயில் சேவைகளில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
இது குறித்து தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள அறிவிப்பில், சென்னை எழும்பூர்- விழுப்புரம் வழித்தடத்தில் பரங்கிமலை ரெயில் பாதை மேம்பாட்டு பணிகள் நடைபெற்று வருவதால் கடந்த 2 வாரங்களாகவே மின்சார ரெயில் சேவையில் மாற்றம் செய்யப்பட்டது. அதிலும் ஒரு சில ரெயில் சேவைகள் ரத்து செய்யப்பட்டது.
அதைத்தொடர்ந்து சென்னை கடற்கரை- தாம்பரம், சென்னை கடற்கரை- செங்கல்பட்டு இடையே இயக்கப்படும் 53 மின்சார ரெயில்களின் சேவை இன்று ரத்து செய்யப்பட்டுள்ளது பயணிகளிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அதன்படி இன்று முதல் (நவம்பர் 1) நாளை மறுநாள் (நவம்பர் 3) வரை சென்னை எழும்பூரில் இருந்து இரவு நேரத்தில் புறப்படும் மங்களூர் எக்ஸ்பிரஸ் நாளை முதல் தாம்பரத்தில் இருந்து புறப்படும். அதே போல் ராக்போர்ட் எக்ஸ்பிரஸ் ரெயில், மன்னை எக்ஸ்பிரஸ் ரெயில்களும் இன்று முதல் 3ம் தேதி வரை தாம்பரத்தில் இருந்து புறப்படும் என்று அறிவிப்பு வெளியாகியுள்ளது.
மேலும் நவம்பர் 3ம் தேதி வரை தாம்பரம்- சென்னை கடற்கரை இடையே இயக்கப்பட்டு வரும் இரவு 10.40 முதல் 11.55 மணி வரையிலான மின்சார ரெயில்கள் முற்றிலும் ரத்து செய்யப்பட்டுள்ளதும் பயணிகள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.