Share via:
தமிழகத்தில் ஜெகோவா பிரார்த்தனை அரங்குகள் மற்றும் மாநாட்டு மையங்களில் பாதுகாப்பு உறுதி செய்யுமாறு உளவுத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.
கேரளாவில் கடந்த 29ம் தேதி மதக்கூட்டரங்கில் திடீரென்று டிபன் பாக்ஸ் குண்டுவெடித்தது. இதில் 3 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இந்தியாவையே உலுக்கிய இந்த வெடிகுண்டு சம்பவத்தைத் தொடர்ந்து அனைத்து மாநிலங்களிலும் கண்காணிப்பு பணிகள் மற்றும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
அதைத்தொடர்ந்து தமிழக மாநில உளவுத்துறை சார்பில் அனைத்து மாவட்ட காவல்துறை ஆணையர், காவல்துறை கண்காணிப்பாளர், உளவுத்துறை துணை ஆணையர் மற்றும் ரெயில்வே ஏ.டி.ஜி.பி., ஐ.ஜி., டி.ஐ.ஜி. உள்ளிட்ட அனைத்து அதிகாரிகளுக்கும் கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.
அந்த எச்சரிக்கை கடிதத்தில், தமிழகம் முழுவதும் செயல்பட்டு வரும் ஜெகோவா பிரார்த்தனை அரங்குகள் மற்றம் மாநாட்டு மையங்களை கண்காணிக்க வேண்டும் என்றும் அப்பகுதிகளில் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என்றும் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. மேலும் அமெரிக்கா, இங்கிலாந்து, ஐரோப்பா மற்றும் இஸ்ரேல் தொடர்புடைய இடங்கள், தூதரகங்கள், சுற்றுலா தலங்கள் ஆகிய இடங்களில் கண்காணிப்பை அதிகப்படுத்த வேண்டும் என்றும் உளவுத்துறை அந்த கடிதத்தில் குறிப்பிட்டுள்ளதாக கூறப்படுகிறது.