Share via:
சிறையில் இருந்த தெலுங்குதேசம் கட்சியின் தலைவரும் ஆந்திர முன்னாள் முதல்வருமான சந்திரபாபு நாயுடுவுக்கு 4 வார கால ஜாமீன் வழங்கி உத்தரவிட்டது ஆந்திர நீதிமன்றம்.
ஆந்திர மாநில முன்னாள் முதல்வரும், தெலுங்கு தேசம் கட்சியின் தலைவருமான சந்திரபாபு நாயுடு திறன் மேம்பாட்டு கழகத்தில் ஊழல் செய்ததாக கைது செய்யப்பட்டு ராஜமுந்திரி சிறையில் அடைக்கப்பட்டிருந்தார்.
இதற்கிடையில் சந்திரபாபு நாயுடு சிறையில் இருந்தபடியே விஜயவாடா ஊழல் ஒழிப்பு நீதிமன்றத்திற்கு கடிதம் ஒன்றை எழுதி அனுப்பினார். அந்த கடிதத்தில், சிறையில் இருக்கும் தனக்கும், வெளியில் இருக்கும் தன்னுடைய குடும்பத்தினரின் உயிருக்கும் ஆபத்து உள்ளதாக அவர் தெரிவித்தார். இதன் காரணமாக ராஜமுந்திரி சிறைக்கு உள்ளேயும், வெளியேயும் தனக்கு இசட் பிரிவு பாதுகாப்பு அளிக்க வேண்டும் என்ற கோரிக்கையையும் அந்த கடிதத்தில் முன்வைத்தார்.
இந்த வழக்கில் தனக்கு ஜாமீன் வழங்கக் கோரி சந்திரபாபு நாயுடு ஆந்திர நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்த மனு விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிமன்றம், சந்திரபாபு நாயுடுவுக்கு 4 வார காலம் ஜாமீன் வழங்கி உத்தரவு பிறப்பித்துள்ளது என்று வழக்கறிஞர் தெரிவித்துள்ளார்.