Share via:
தென்மேற்கு பருவமழை பொய்த்ததாலும், வெங்காய வரத்து குறைந்துள்ளதாலும் தமிழகத்தில் வெங்காயத்தின் விலை உச்சத்தை தொட்டுள்ளது. இது இல்லத்தரசிகள் மத்தியில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தமிழகத்தில் கடந்த சில நாட்களுக்கு முன்பு தக்காளியின் விலை கடும் உச்சத்தைத் தொட்டு அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த விலை உயர்வு இல்லத்தரசிகள் மற்றும் ஓட்டல் உரிமையாளர்களை கடும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது. மெல்ல மெல்ல தக்காளியின் விற்பனை விலை இயல்புநிலைக்கு வந்தது.
இந்நிலையில் கடந்த சில நாட்களாக வெங்காயத்தின் விலை உயர்ந்துள்ளது. கோயம்பேடு மார்க்கெட்டுக்கு தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து வெங்காய வரத்து குறைந்துள்ளதால் இந்த கடும் விலை உயர்வு ஏற்பட்டுள்ளது. அதிலும் குறிப்பாக மராட்டிய மாநிலத்தில் இருந்து நாளொன்றுக்கு வந்து கொண்டிருந்த 7 ஆயிரம் டன் வெங்காய வரத்து குறைந்துள்ளதால் விலை இன்னும் அதிகரிக்கும் என்ற அச்சமும் நிலவுகிறது.
இந்த விலை உயர்வு குறித்து சென்னை கோயம்பேட்டில் உள்ள வெங்காயம் விற்பனையாளர்கள் கூறும்போது, ‘‘மராட்டிய மாநிலத்தில் தென்மேற்கு பருவமழை பெய்யாததால், அங்கு காரிப்பருவத்தில் வெங்காயம் நடவு செய்யப்படவில்லை என்று தெரிகிறது. இதனால் இம்மாதம் நடைபெற இருந்த வெங்காய அறுவடையும் நடைபெறவில்லை. இதன் காரணமாகவே மராட்டிய மாநிலத்தில் இருந்து வரும் வெங்காயத்தின் வரத்து குறைந்து தமிழகத்தில் விலை அதிகரித்துள்ளது’’ என்று தெரிவித்தனர். வெங்காயத்தின் விலை உயர்வால் இல்லத்தரசிகளும், ஓட்டல் உரிமையாளர்களும் என்ன செய்வதென்று தெரியாமல் கவலையடைந்துள்ளனர்.
இனி என்ன தக்காளியை வைத்து மீம்ஸ் கிரியேட் செய்தவர்கள் இனி வெங்காயத்தின் விலை உயர்வை மையப்படுத்தி மீம்ஸ்களை உருவாக்க ஆரம்பித்துவிடுவார்கள்.