Share via:
ஆளுநர் மாளிகை முன்பு பெட்ரோல் குண்டு வீசிய கருக்கா வினோத்தை 3 நாட்கள் போலீஸ் காவலில் வைக்க சைதாப்பேட்டை நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
கடந்த 25ம் தேதி சென்னையில் அமைந்துள்ள ஆளுநர் மாளிகையான ராஜ்பவன் முன்பு பெட்ரோல் குண்டு வீசிய வழக்கில் ரவுடி கருக்கா வினோத்தை போலீசார் கைது செய்து புழல் சிறையில் அடைத்தனர். இச்சம்பவம் தமிழகத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. தமிழக அரசு பா.ஜ.க.வுக்கு எதிராகவும், ஆளுநருக்கு எதிராகவும் செயல்படுவதாக குற்றச்சாட்டு எழுந்தது.
இதைத்தொடர்ந்து கருக்கா வினோத்தை 3 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதிக்க வேண்டும் என்று போலீசார், சைதாப்பேட்டை நீதிமன்றத்தை நாடி மனுதாக்கல் செய்தனர்.
இந்நிலையில் இவ்வழக்கு இன்று சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது புழல் சிறை அதிகாரிகளின் பலத்த பாதுகாப்புடன் கருக்கா வினோத் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். அப்போது போலீசார் கோரிக்கையை ஏற்றுக் கொண்ட நீதிபதி, கருக்கா வினோத்¬ 3 நாட்கள் காவலில் எடுத்து விசாரணை நடத்த அனுமதி அளித்து உத்தரவு பிறப்பித்தார்.
அதன்படி வருகிற நவம்பர் 1ம் தேதி கருக்கா வினோத்தை போலீஸ் காவலில் எடுத்து விசாரணை நடத்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதைத்தொடர்ந்து கிண்டி போலீசார், கருக்கா வினோத்தை விசாரணைக்காக அழைத்து செல்ல அனைத்து அலுவல் பணிகளையும் மேற்கொண்டு வருகின்றனர்.