Share via:
தமிழக மீனவர்கள் 64 பேரையும் விடுவிக்க மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி ராமேஸ்வரம் மீனவர்கள் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரத்தைச் சேர்ந்த 27 மீனவர்கள் எல்லையை தாண்டி வந்ததாகக் கூறி இலங்கை கடற்படையினரால் கடந்த 14ம் தேதி கைது செய்யப்பட்டனர். இதனால் கடந்த 2 வாரங்களாக ராமேஸ்வரம் மீனவர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டதோடு கைது செய்யப்பட்ட 27 மீனவர்களை விடுவிக்கும் படி மத்திய, மாநில அரசை கேட்டுக் கொண்டனர்.
இந்நிலையில் கடந்த சனிக்கிழமை போராட்டத்தை மீனவர்கள் 1,000 பேர்போராட்டத்தை வாபஸ் வாங்கியதோடு தங்கள் வாழ்வாதாரத்தை கருத்தில் கொண்டு மீண்டும் மீன்பிடிக்க கடலுக்கு சென்றனர். அன்று முதல் நாளே மறுபடியும் ரோந்து வந்த இலங்கை படையினர் எல்லை தாண்டி வந்ததாகக் கூறி மீண்டும் 37 மீனவர்களையும், 5 விசைப்படகுகளையும் சிறை பிடித்துச் சென்றனர்.
இந்த தொடர் கைது சம்பவம் ராமேஸ்வரம் பகுதி மீனவர்கள் மத்தியில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. கைது செய்யப்பட்ட மீனவர்களை விடுவிக்கும்படியும், பறிமுதல் செய்யப்பட்ட விசைப்படகுகளை மீட்டுத் தரும்படியும் வலியுறுத்தி இன்று முதல் (அக்.30) காலவரையற்ற வேலை நிறுத்தத்தை மீனவர்கள் தொடங்கியுள்ளனர்.
இதனால் 700க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் கடலில் நங்கூரமிட்டு நிறுத்தப்பட்டுள்ளது. வேலை நிறுத்தப் போராட்டத்தால் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மீனவ குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளன. தற்போது ராமேஸ்வரம் மீன்பிடித் துறைமுகமே வெறிச்சோடி காணப்படுகிறது.
இதற்கிடையில் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்ட மீனவர்கள் 64 பேரையும் மத்திய அரசின் துணையுடன் மீட்க தமிழக அரசு விரைந்து நடவடிக்கை எடுக்கும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உறுதி அளித்துள்ளது குறிப்பிடத்தக்கது.