Share via:
தேர்தலில் எங்களை மக்கள் புறக்கணித்தால் அவர்களுக்குத் தான் சிக்கல் ஏற்படும் என்று தெலங்கானா முதலமைச்சர் சந்திரசேகர்ராவ் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
வருகிற நவம்பர் மாதத்தில் மிசோரம், ராஜஸ்தான், தெலங்கானா உள்ளிட்ட 5 மாநிலங்களில் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளன. மேலும் தேர்தல் முடிவுகள் வருகிற டிசம்பர் மாதம் 3ம் தேதி வெளியாக உள்ளது. இதனால் 5 மாநிலங்களிலும் ஆட்சியை பிடிக்க அனைத்துக் கட்சியினரும் தேர்தல்களத்தில் பரப்புரையில் ஈடுபட்டுள்ளனர்.
தெலங்கானா மாநில சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு அம்மாநில முதலமைச்சர் சந்திரசேகர்ராவ், அச்செம்பேட் தொகுதியில் தீவிர பிரசாரம் மேற்கொண்டார். அப்போது அவர் பேசும்போது, ‘‘சட்டமன்ற தேர்தலில் தோல்வி அடைந்தால் அதில் எங்களுக்கு எந்த இழப்பும் கிடையாது. மக்களுக்குத்தான் அது இழப்பு என்று தெரிவித்தார். மேலும் மாநிலத்தை வளர்ச்சிப் பாதையில் அழைத்து செல்லும் டி.ஆர்.எஸ். கட்சியை மக்கள் புறக்கணித்தால் அவர்கள் பெரும் சிக்கலில் மாட்டிக் கொள்வார்கள் என்றும் சந்திரசேகர்ராவ் எச்சரிக்கை விடுத்தார்.
தெலங்கானா மாநிலத்தை போராடி உருவாக்கியவர்களுக்கு அதனை வழிநடத்த தெரியும் என்று தெரிவித்த அவர், தான் இதனை ஒரு கடமையாகவே பார்ப்பதாக பெருமிதத்துடன் தெரிவித்தார்.
நவம்பர் மாதம் நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு தெலங்கானாவில் அரசியல் களம் சூடுபிடித்துள்ளது.