Share via:
உச்சநீதிமன்ற உத்தரவு, உயர்நீதிமன்ற அழுத்தம் என எதற்கும் அசைந்துகொடுக்காமல்
தமிழ்நாட்டில் மதக் கலவரம் ஏற்படுவதற்கு ஒருபோதும் அனுமதிக்க முடியாது என்று உறுதி
காட்டிய விஜய்யின் தைரியத்துக்கு பொதுமக்களிடம் ஏகோபித்த ஆதரவு கிடைத்துவருகிறது. எதுவுமே
பேசாமல் அமைதியாக இருந்தே இந்த அதிரடி ஆக்ஷனை நிகழ்த்திக் காட்டியிருக்கிறார்.
திருப்பரங்குன்றத்தில் புதிய இடத்தில் தீபம் ஏற்றுவதன் மூலம் இஸ்லாமியர்களுக்கு
நெருக்கடி கொடுப்பதும், அங்கிருக்கும் சிக்கந்தர் தர்காவை அகற்றுவதும் இந்து முன்னணி
மற்றும் சில தீவிர இந்துக்களின் நோக்கமாக நூறாண்டுகளாக இருந்துவருகிறது. இதற்காக ஆங்கிலேயர்
காலத்தில் இருந்து வழக்கு நடந்துவருகிறது
இந்த நிலையில், ”மலை உச்சியில் இருப்பது தீபத்தூண் அல்ல, கல்
தூண். இதில் அரசு உறுதியாக இருக்கிறது…” என்று மதுரை மாவட்ட ஆட்சியர் நிஷாந்த் கிருஷ்ணா
மதுரை உயர்நீதிமன்றத்தில் பகிரங்கமாக உண்மையைக் கூறினார். அதோடு, அந்த கல்தூணில் தீபம் ஏற்றுவது நடைமுறை சாத்தியமல்ல.
பெரிய தீபம் ஏற்றக் கூடிய வகையில் அந்த கல்தூணில் கொப்பரையை வைக்கவோ, அதில் சில நூறு
கிலோ கொண்ட நெய்யை ஊற்றி, திரியை வைக்க சாத்தியமில்லை என்பது எல்லோருக்கும் தெரிந்த
சமாச்சாரம்.
ஆனாலும், ஏனோ நீதிமன்றங்கள் அங்கு தீபம் ஏற்றுவதற்கு தொடர்ந்து
அழுத்தம் கொடுத்துவருகின்றன. நேற்றைய தினம் நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன், ‘உச்சநீதி
மன்றத் தீர்ப்பை மீறக் கூடாது’ என்று மதுரை மாவட்ட ஆட்சியரை அழைத்து ஞாபகமூட்டியது
போன்று மிரட்டினார் என்றுதான் சொல்ல வேண்டும்.
ஆனால், ஆகம விதிப்படி, மூலவர் சிரசுக்கு நேர்மேல் உச்சிப்பிள்ளையார்
கோயில் தீப மண்டபத்திலேயே திருப்பரங்குன்றம் கார்த்திகை மகாதீபம் ஏற்றப்பட்டது. இதுகுறித்து
கோயில் நிர்வாகம், ‘தமிழர்களின் தொன்மையான வழிபாட்டுத் தலங்களில் ஒன்றாக திகழ்ந்து
வரும் திருப்பரங்குன்றம் அருள்மிகு சுப்பிரமணியசுவாமி திருக்கோயிலில் நடைபெற்று வரும்
திருவிழாக்கள், பூஜைகள், வழிபாட்டுச் சடங்குகள் மற்றும் கார்த்திகை தீபத் திருவிழா
ஆகியவை பல தலைமுறைகளாக பின்பற்றப்பட்டு வரும் சமய மரபுகள், பாரம்பரிய பழக்க வழக்கங்கள்
மற்றும் ஆகமவிதிகளின் அடிப்படையில் நடைபெற்று வருகின்றன.
குறிப்பாக, திருக்கோயிலில் காலங்காலமாக கடைப்பிடிக்கப்படும் வழக்கத்தின்படி,
மூலவரின் சிரசுக்கு நேர்மேல் உள்ள இடமான, மலை மேல் உள்ள உச்சிப்பிள்ளையார் கோயில் அருகிலுள்ள
தீப மண்டபத்தில் கார்த்திகை மகாதீபம் ஏற்றப்பட்டு வருகின்றது. இத்தகைய நீண்ட காலத்தொடர்ச்சியான
வழிபாட்டு நடைமுறைகள், சமய மரபுகள் மற்றும் சடங்குகள், ஆகம விதிகள் ஆகியவை திருக்கோயிலின்
தனித்துவமான சமய அடையாளங்களாக கருதப்படுகின்றன.
எனவே, நமது திருக்கோயிலில் காலங்காலமாக பின்பற்றப்பட்டு வரும்
மரபுகள், பாரம்பரிய பழக்க வழக்கங்கள், ஆகம விதிமுறைகள் மற்றும் நிலை பெற்ற வழிபாட்டு
நடைமுறைகள் பாதுகாக்கப்பட வேண்டியவை என்றும், அவற்றின் வரலாற்றுத் தொடர்ச்சி மற்றும்
சமய முக்கியத்துவம் கொண்ட ஆவணங்கள், ஆகமச் சான்றுகள் மற்றும் ஸ்தானிகர்களின் கருத்துகளின்
அடிப்படையில், வழக்கமாக தீபம் ஏற்றப்படும் இடத்திலேயே இந்த ஆண்டும் தீபம் ஏற்றுவதற்கும்,
அதைத் தொடர்ந்து திருக்கோயில் மரபு மற்றும் பழக்க வழக்கங்களை நீதிமன்றத்தின் கவனத்திற்கு
கொண்டு செல்லப்பட வேண்டும்’’ என்று திருக்கோயில் அறங்காவலர் குழு ஏகமனதாக தீர்மானித்து
தீர்மானம் நிறைவேற்றியுள்ளது.
இந்த அறங்காவலர் குழு தீர்மானத்தின்படி, இத்திருக்கோயில் திருக்கார்த்திகை
மகாதீபமானது, இத்திருக்கோயில் மூலவரின் சிரசுக்கு நேர்மேல் உள்ள இடமான, மலை மேல் உள்ள
உச்சிப்பிள்ளையார் கோயில் அருகிலுள்ள தீப மண்டபத்தில் ஏற்றப்பட்டது. இதையே உச்சநீதிமன்றம்
மற்றும் உயர்நீதிமன்றத்தில் விஜய் அரசு தெரிவிக்கும்.
நீதிமன்றத்தை விட ஆகம
விதிமுறைகளே முக்கியம் என்ற வாதத்தைக் கையில் எடுத்திருக்கிறது. அதாவது பா.ஜ.க. ஆதரவாளர்களை
அவர்களின் ஆயுதத்தைக் கையில் எடுத்தே மண்டையில் அடித்திருக்கிறார் விஜய்.
நீதிமன்றத்தை விட மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுக்கே அதிக
அதிகாரம் என்பதைக் காட்டியிருக்கிறார் விஜய்.
சபாஷ், சரியான நடவடிக்கை.

