Share via:
திருப்பரங்குன்றம் மலையில் இந்த ஆண்டு மட்டும் கார்த்திகை தீபத்தன்று
ஒரு நாள் தீபம் ஏற்ற உச்சநீதிமன்றம் அனுமதியளித்த நிலையில் மதுரையில் இந்து அமைப்புகளை
சேர்ந்தவர்கள் இனிப்பு வழங்கி பட்டாசு வெடித்து கொண்டாடி வருகிறார்கள். அதேநேரம், இஸ்லாமியர்கள் பெரும் அச்சத்தில் இருக்கிறார்கள்.
திருப்பரங்குன்றம் விவகாரத்தில் உச்சநீதிமன்றம் இடைக்கால தீர்ப்பை
தலைகீழாக கொடுத்துள்ளது. உச்சநீதிமன்றத்தின் இடைக்கால உத்தரவு கண்டனத்துக்குரியது.
எனவே, தமிழக அரசு மறுசீராய்வு மனு தாக்கல் செய்ய வேண்டும் என்று சிபிஎம் சண்முகம் காட்டமாக
பேட்டி கொடுத்திருக்கிறார்.
அவர் மேலும், ‘’திருப்பரங்குன்றத்தில்
வழக்கத்திற்கு மாறாக தர்கா அருகில் உள்ள நில அளவை தூணில் இந்த ஆண்டு தீபம் ஏற்றிக்
கொள்ளலாம் என்பது எந்த வகையிலும் சட்டத்தின் அடிப்படையிலான தீர்ப்பு அல்ல. இது
இடைக்கால தீர்ப்பு தான் என்று உச்சநீதிமன்றமே கூறிவிட்டு, இதுவரையிலும் தீபம் ஏற்றப்படாத ஒரு இடத்தில் இந்த ஆண்டு
மட்டும் தீபம் ஏற்றலாம் என்று சொல்வது நியாயமற்றதாகும். தமிழ்நாடு அரசு மற்றும்
கோவில் நிர்வாகம் நில அளவைக் கல் தூணில் தீபம் ஏற்றுவது சரியல்ல என்பதை
ஆதாரங்களுடன் முன்வைத்த நிலையில், இடைக்காலமாக
இந்த தீபம் ஏற்றலாம் என்கிற தீர்ப்பு நியாயமற்றதாகும்’’ என்று கூறியிருக்கிறார்.
காங்கிரஸ் கட்சியும் விடுதலை
சிறுத்தைகளும் இந்த தீர்ப்பை கண்டிப்பது போல் மேலோட்டமாக கண்டித்திருக்கிறார்கள்.
குறிப்பாக திருமாவளவன், ‘’திருப்பரங்குன்றம் மலையிலுள்ள ‘அளவைக்கல்’ எனப்படும்
கல்தூணில் கார்த்திகை தீப நாளன்று ( நவ-24) தீபத்தை ஏற்ற வேண்டுமென உச்சநீதிமன்றம்
ஒருசில நிபந்தனைகளுடன் இடைக்காலத் தீர்ப்ப்பு ஒன்றை வழங்கியுள்ளது. அத்துடன், தேவைப்பட்டால்
‘மத்திய தொழிலகப் பாதுகாப்பு படையின்’ உதவியைப் பெற்றுக் கொள்ள வேண்டுமென கூடுதலான
அறிவுறுத்தலையும் செய்திருக்கிறது. உச்சநீதிமன்றத்தின் இந்த நிலைப்பாட்டில் விடுதலைச்
சிறுத்தைகள் கட்சிக்குத் துளியும் உடன்பாடில்லை. இதனை முற்றாக எதிர்க்கிறோம். இதனை
நடைமுறைப்படுத்தக் கூடாது என்பதே எமது நிலைப்பாடு ஆகும்.
அதேவேளையில், உச்சநீதிமன்றத்தின் வழிகாட்டுதலை மீறமுடியாது என்கிற
இக்கட்டுக்கு மாவட்ட ஆட்சியர் அல்லது உயர் அதிகாரிகள் தள்ளப்பட்டிருப்பதால், அதனை நடைமுறைப்படுத்துவதற்கு
அவர்கள் முனைந்தால், அரசு மிகுந்த எச்சரிக்கையாக இருக்க வேண்டும்’’ என்றும் கூறியிருக்கிறார்.
நீதிமன்றத்தின் தீர்ப்பு அதிர்ச்சி அளிக்கிறது, சிறுபான்மையினர்
அமைதி காக்கவேண்டும் என்று இஸ்லாமியத் தலைவர்கள் கொதிக்கிறார்கள். விஜய் நிலைமையை சமாளித்துவிடுவார்
என்றே நம்புவோம்.

