Share via:
வழிபாட்டுக்கு யாரும் யாரையும் போகக் கூடாது ன்னு சொல்ல உரிமை
இல்லை, தைரியம் இருந்தா முன்னாடி வந்து பேசுங்க என்று சிங்கப்பெண் போன்று குரல் கொடுத்து
பட்டியலின மக்களை 50 ஆண்டுகளுக்குப் பிறகு கோயிலுக்குள் அனுமதித்திருக்கிறார் எஸ்.பி.
ஷானாஸ்.
இதுவரையிலான ஆட்சியில் திராவிட அரசு பேருக்காக பேச்சுவார்த்தை
நடத்துமே தவிர, உருப்படியாக எதுவும் காரியம் நடக்காது. முதன்முறையாக 50 ஆண்டு பழக்கத்தை
அடித்து உடைத்திருக்கிறார். இது, தவெக ஆட்சி என்பதாலே சாத்தியமானது எனலாம்.
இதுகுறித்து, ‘’குரால் கிராமத்து பெருமாள் கோயிலில் ஜாதிவெறி பூட்டை
உடைத்துத் தள்ளி இருக்கிறார் மாவட்ட பெண் போலீஸ் அதிகாரி ஷானாஸ். முகநூலில் அவருக்கு
குவியும் பாராட்டு மழை நம்மை மெய் சிலிர்க்க வைக்கிறது. அரசுப் பதவி வழங்கும் அதிகாரத்தை
எப்படி எதற்காகப் பயன்படுத்த வேண்டும் என்பதற்கு இவர் சான்றாக நிற்கிறார்.
50 ஆண்டுகளாக தலித் மக்களை கோயிலுக்குள்ளே அனுமதிக்காத கிராமங்கள்
தமிழ்நாட்டில் இருக்கின்றன என்பது அவமானம் ; வெட்கக்கேடு! இந்தக் கிராமங்களில் இதற்கு
நியாயம் கேட்க மனிதர்களே இல்லாமல் போய் விட்டார்களா? சமூக அவமானத்தை கண்டும் காணாமல்
கடந்து போகும் மனநிலை எப்படி நீடிக்கிறது? தமிழகத்தின் பல கிராமங்கள் இப்படி ஜாதி வெறியிலும்
ஜாதிச் சங்கப் பிடியிலும் தான் சிக்கித் தவிக்கின்றன.
“நீங்க நாசமா போயிடுவீங்க”என்று ஜாதி வெறிக்கு ஆதரவாக
குரல் கொடுக்கும் பெண்களும் உரிமைக்கு போராடும் பெண்களும் ஒரே தோற்றத்தில் தான் இருக்கிறார்கள்;
சொல்லப் போனால் ஒரே வாழ்நிலை தான்! ஆனால் எந்த விலை கொடுத்தும் வாங்காது இலவசமாக கிடைக்கும்
இந்த ஜாதி இப்படி ஒரு கொடூர வெறியை மண்டைக்குள் திணித்து வைத்திருக்கிறது. கிராமத்து
ஜாதி வெறி ஆண்கள் இந்த சட்ட விரோத செயல்பாடுகளுக்கு பெண்களை களத்துக்கு அனுப்புகிறார்கள்;
ஆனால் பெரும்பாலான ஜாதிக் குடும்பங்களில் ஆண்களின் வன்முறையையும், ஒடுக்கு முறையையும்
சந்திப்பவர்களும் இவர்கள்தான்; தன்னிலை உணராமல் ஜாதிவெறி தடுக்கிறது.
இதே பெண் சமூகத்தில் பிறந்து அய்.பி.எஸ் படித்த ஒரு பெண் அதிகாரிதான்
இங்கே 50 ஆண்டுகால அவமானத்திற்கு தீர்வு கண்டிருக்கிறார்.16 பேர் மீது வன்கொடுமை தடுப்புச்
சட்டத்தின் கீழ் வழக்கும் பதிவு செய்திருக்கிறார். “கோயில் அறநிலையத்துறையின்
கீழ் வந்துவிட்டது என்பது உங்களுக்கு தெரியாதா?வழிபாட்டில் யாரும் எவருக்கும் தடை போட
முடியாது” என்று ஓங்கி ஒலித்த அந்த கம்பீரமான குரல் ஆனந்தக் கூத்தாட வைத்து விட்டது.
இப்படியும் காவல் துறையில் சில அதிகாரிகள் இருக்கிறார்கள்’’ என்று விடுதலை இராசேந்திரன் பாராட்டியிருக்கிறார்.

