Share via:
மதுராந்தகம் (தனி) மற்றும் தாராபுரம் (தனி) சட்டமன்றத் தொகுதிகளின்
இடைத்தேர்தல் வரும் 6ம் தேதி நடைபெறவுள்ளது. தேர்தல் களத்தில் விஜய், மு.க.ஸ்டாலின்,
எடப்பாடி பழனிசாமி ஆகிய மூன்று பேரும் கடுமையாக மோதி வருகிறார்கள். இந்த பெருந்தலைகளுக்கு
இடையில் நாம் தமிழர் கட்சியும் கம்யூனிஸ்ட் கட்சிகளும் களம் இறங்கியுள்ளதால் ஐந்து
முனைப் போட்டி நடக்கிறது.
கடைசி கட்ட தேர்தல் கருத்துக்கணிப்புப்படி, இரண்டு தொகுதியும்
அதிமுக கையில் இருந்து நழுவி விஜய் கையில் விழுவதாகத் தெரிகிறது.
மதுராந்தகம்
கடந்த 2026 தேர்தலில் அதிமுக 34.95 சதவீத வாக்குகளுடன் வெற்றி
பெற்றது. தவெக 31.32 சதவீதமும், திமுக 30.18 சதவீதமும் பெற்றன. வெற்றி வித்தியாசம்
7,194 வாக்குகள். இதனால் மதுராந்தகத்தில் மூன்று கட்சிகளுக்கும் கணிசமான அடிப்படை வாக்கு
உள்ளது உறுதியாகியுள்ளது.
மரகதம் குமாரவேலுக்கு தொகுதியில் தனிப்பட்ட செல்வாக்கு இருக்கிறது.
அதோடு, விஜய் நேரடியாக களத்தில் இறங்கி வேலை பார்ப்பது மிகப்பெரும் பலமாக மாறியிருக்கிறது.
மதுராந்தகத்தில் திமுக சார்பில் களம் இறங்கும் பரந்தாமன், வெளியூர்
வேட்பாளர் என்பதால் அவர் இந்த போட்டியிலே இல்லை எனும் நிலையே நிலவுகிறது. அதனால் அதிமுக
வேட்பாளர் கணிதா சம்பத்துக்கும் மரகதம் குமாரவேலுக்கும் இடையில்தான் போட்டி.
அதிமுகவில் இருந்து மரகதம் குமாரவேல் ராஜினாமா செய்தது சிறிய அளவுக்குத்
தாக்கமேற்படுத்தும் என்றாலும், அது வெற்றியைப் பாதிக்க வாய்ப்பு இல்லை என்கிறார்கள்.
அதனால், மதுராந்தகத்தில் தவெகவிற்கு வெற்றி வாய்ப்பு அதிகம். இந்த முறை தவெக 35 முதல்
40% வாக்குகள் பெற்று முதல் இடத்திலும் அதிமுக 25 முதல் 30% வாக்குகள் பெறும் எனவும்
திமுக 25 சதவீத வாக்குகள் பெறும் என்று கணிக்கப்பட்டுள்ளது.
தாராபுரம்
கடைசியாக நடந்த 2016, 2021 , 2026 சட்டசபை தேர்தலில் 2016ல் திமுக
கூட்டணியில் போட்டியிட்ட காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்றது, அடுத்து 2021ல் திமுக,
2026ல் அதிமுக என வெற்றி பெற்றது, இதில் கடந்த 2021 சட்டசபை தேர்தலில் கடும் போட்டிகளுக்கு
இடையில் வெறும் 1200 வாக்குகள் வித்தியாசத்தில் தான் திமுக வெற்றி பெற்றது. அடுத்து
கடைசியாக நடந்த 2026 சட்டசபை தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிட்ட சத்யபாமா சுமார்
81 ஆயிரம் வாக்குகள், திமுக சுமார் 64 ஆயிரம் வாக்குகள், தவெக சுமார் 46 ஆயிரம் வாக்குகள்
பெற்று இருந்தது, சத்யபாமா சுமார் 17 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்,
தேர்தல் முடிவுக்கு பின்பு ஆட்சி அமைக்க திமுக உடன் கூட்டணி வைக்க
எடப்பாடி பழனிசாமி முயன்றார் என்று சத்யபாமா சொல்வதை அதிமுகவினர் நம்புகிறார்கள். கட்சி
மாறிய அதிருப்தி இருந்தாலும், அவருக்கு அதிமுகவினர் வாக்குகள் விழுவதற்கு வாய்ப்பு
உண்டு. நீண்ட நாட்களாக அரசியலில் இருப்பதன் மூலம் மிகப்பெரும் ஆதரவு வட்டம் வைத்திருக்கிறார்.
விஜய் மேடையில் சத்யபாமா அழுத விவகாரம் அவருக்கு பாசிடிவாக மாறியிருக்கிறது.
தவெக கடந்த தேர்தலில் சுமார் 46 ஆயிரம் வாக்குகளை பெற்று இருந்தது,
சமீபத்தில் முதல்வர் விஜய்யின் தாராபுரம் பிரச்சாரத்திற்கு பின்பு இன்னும் தவெகவின்
செல்வாக்கு அங்கே அதிகரித்து இருப்பதால் கூடுதலாக 40 ஆயிரம் வாக்குகள் கிடைக்கும் என்கிறார்கள்.
அதனால், இந்த தொகுதியில் தவெக ஜெயிப்பது உறுதியாகியுள்ளது.
தாராபுரத்தில் திமுக இரண்டாம் இடத்திற்கு வருகிறது. கடந்த முறை
பெற்றது போன்று 60 ஆயிரம் வாக்குகள் பெறுகிறது. அதிமுக இங்கு 20 வாக்குகள் குறைவாகப்
பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
கடுமையான போட்டி என்பது போன்று களம் இருந்தாலும், இரண்டிலும் மிகப்பெரிய
வித்தியாசத்தில் விஜய் வெற்றி பெறுவார் என்பதே கடைசி கட்ட கள நிலவரம்.

