News

முதல்வர் போட்டியில் தனுஷ்…? வெளுக்கும் விஜய் ரசிகர்கள்

Follow Us

அரசியல் பொதுவாழ்வில் இருந்து வெளியேறிவிட்டதாக அறிவித்த அதிமுக முன்னாள் அமைச்சர் செம்மலை, நேற்றைய தினம் தமிழக வெற்றிக் கழகம் கட்சியில் அதிகாரப்பூர்வமாக இணைந்தார். தாராபுரத்தில் நடைபெற்ற இடைத்தேர்தல் பிரசாரக் கூட்டத்தில், தமிழக முதலமைச்சரும் தவெக தலைவருமான விஜய் முன்னிலையில் அவர் கட்சியில் ஐக்கியமானார்.

இந்த நிகழ்வின் போது செம்மலைக்கு தவெக துண்டை அணிவித்து விஜய் கட்சியில் வரவேற்றார். ஜெயலலிதா அமைச்சரவையில் சுகாதாரம் மற்றும் கல்வித்துறை அமைச்சராகப் பதவி வகித்த செம்மலை, சில மாதங்களுக்கு முன்பு அதிமுகவில் இருந்து விலகினார். அதிமுகவில் தமக்கான வாய்ப்புகள் மறுக்கப்பட்டதாகக் கூறி விலகிய அவர், தற்போது தனது மகனின் அரசியல் எதிர்காலத்தைக் கருத்தில் கொண்டும், தவெக தலைமையின் அழைப்பை ஏற்றும் இம்முடிவை எடுத்துள்ளதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. கொங்கு மண்டலத்தைச் சேர்ந்த மூத்த தலைவரான செம்மலையின் வருகை, தவெக-விற்கு சமூக ரீதியாகவும் அரசியல் ரீதியாகவும் கூடுதல் பலமாக அமையும்.  

இதையடுத்து தாராபுரம் இடைத்தேர்தல் பிரசாரத்தில் தவெக வேட்பாளர் சத்யபாமாவை ஆதரித்து நேற்று நடைபெற்ற பிரம்மாண்டப் பொதுக்கூட்டத்தில் முதல்வர் விஜய் பேசினார். அப்போது தவெக செய்த சாதனைகளைப் பட்டியல் போட்டார்.

‘’தவெக ஆட்சி அமைந்த குறுகிய காலத்திலேயே கொடுத்த தேர்தல் வாக்குறுதிகளைப் படிப்படியாக நிறைவேற்றி வருகிறோம். 717 டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டுள்ளன.

200 யூனிட் இலவச மின்சாரம், சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படை மற்றும் 65 போதைப்பொருள் தடுப்புப்படைகள் அமைக்கப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. காமராஜர் காலை உணவுத் திட்டம் விரிவுபடுத்தப்பட்டுள்ளது. 13 லட்சம் விவசாயிகளுக்குப் பயிர்க்கடன் தள்ளுபடி, நெல்லுக்கு சன்ன ரகத்துக்கு குவிண்டாலுக்கு ரூ.2,750, பொது ரகத்துக்கு ரூ.2,600 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. பால் கொள்முதல் விலை லிட்டருக்கு ரூ.6 உயர்த்தப்பட்டு, தாய்மாமன் தங்க மோதிர திட்டமும் தொடங்கப்பட்டது.

பெண்களுக்கான இலவசப் பேருந்து ‘வெற்றிப் பயணம்’ திட்டம் அக்டோபர் 2 முதல் நடைமுறைக்கு வரும். ஆண்டுக்கு 3 இலவச சிலிண்டர் திட்டம் பொங்கல் முதல் செயல்பாட்டுக்கு வரும். முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீடு ரூ.25 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது. மேலும் 630 அம்மா உணவகங்கள் சீரமைக்கப்பட்டுள்ளன. நகர்ப்புற சாலை உள்கட்டமைப்புக்கு ரூ.1,850 கோடி ஒதுக்கப்பட்டு பணிகள் நடைபெறுகின்றன. ரூ.1 லட்சம் கோடி முதலீடுகள் ஈர்க்கப்பட்டன.

திருப்பூரின் தொழில் வளம் காக்க பருத்திக்கான 11 சதவீத இறக்குமதி வரியை ரத்து செய்ய வைத்துள்ளோம். மடத்துக்குளத்தில் புதிய விதை சேமிப்புக் கிடங்கு, திருமூர்த்தி அணையில் சுற்றுலாப் பூங்கா மேம்பாடு, உயிரியல் பாதுகாப்பு ஆய்வகம் ஆகியவை அமைக்கப்பட்டு வருகின்றன.

தாராபுரம் தொகுதியில் பல ஆண்டுகளாக நிலுவையில் உள்ள இலவச வீட்டு மனைப் பட்டாக்கள் வழங்குதல், ஆனைமலையாறு – நல்லாறு திட்டம், காவிரி கூட்டுக் குடிநீர் திட்டம், நகராட்சி உள்கட்டமைப்புப் பணிகள் அனைத்தும் விரைந்து நிறைவேற்றப்படும்.

நமக்கு மன்னராட்சி மனப்பான்மை கிடையாது. மக்களிடம் சென்று மக்களுடன் வாழ்கிறோம். எம்மதமும் நம்மதம் என்பதே நமது கொள்கை. அண்ணா, எம்ஜிஆர் காலத்தில் எளிய குடும்பத்தைச் சேர்ந்தவர்களை தேர்தலில் நிறுத்தி, பெரிய மனிதர்களை வீழ்த்தியது போல, தற்போதும் எளிய மனிதர்களைக் கொண்டு குறுநில மன்னர்களை மக்கள் வீழ்த்தி தவெகவை ஆட்சியில் அமர்த்தியுள்ளனர்.

கொளத்தூர் மக்களே வாக்களிக்கவில்லை என்று மேடையில் ஒப்புக்கொண்ட திமுக தலைவர், தற்போது நம்மை ஒருமையில் பேசி வருகிறார் எந்த அளவுக்குத்தரம் தாழ்த்திப் பேசுகிறார்களோ, அந்த அளவுக்கு மக்கள் நம்மை உயர்த்துவார்கள். திமுகவின் ‘பி’ டீமாகச் செயல்படும் சில கட்சிகள், எம்ஜிஆரையும் ஜெயலலிதாவையும் மறந்துவிட்டு திமுகவுடன் மறைமுகக் கூட்டு வைக்கின்றன.

அதைஏற்க முடியாமல் தான் உண்மையான விசுவாசியான சகோதரி சத்யபாமா எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்துவிட்டு தவெகவில் இணைந்தார். எம்ஜிஆருக்கும் ஜெயலலிதாவுக்கும் துரோகம் இழைத்தவர்களுக்கும், திமுகவுக்கும் மக்கள் பாடம் புகட்ட வேண்டும். தாராபுரம் வேட்பாளர் சத்யபாமாவுக்கு விசில் சின்னத்தில் வாக்களித்து வெற்றி பெறச் செய்ய வேண்டும்’’ என்று முதல்வர் விஜய் பேசினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share via
Copy link