Share via:
இன்று நிதி ஆயோக்கின் 11வது ஆட்சிமன்றக்
குழுக் கூட்டம் டெல்லியில் உள்ள குடியரசுத் தலைவர் மாளிகை கலாச்சார மையத்தில் பிரதமர்
நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்றது. இதில் விஜய் கலந்துகொண்டு பேசினார். இதையடுத்து
பிரதமர் நரேந்திரமோடியை சந்தித்துப் பேசினார்.
நிதி ஆயோக்கின் 11வது ஆட்சிமன்றக் கூட்டத்தில்
பேசிய விஜய், ‘’இந்தியா வளர்ச்சியடைந்த நாடாக முன்னேறவும், அனைத்துத் தரப்பு மக்களை
உள்ளடக்கிய வளர்ச்சியாகவும் அமைந்திட செயல்படுத்தப்படும் திட்டங்களை முழு மனதோடு வரவேற்போம்.
மேலும், அதிகாரமளிக்கப்பட்ட மாநிலங்கள், கூட்டுறவுக் கூட்டாட்சி மற்றும் அனைவரையும்
உள்ளடக்கிய வளர்ச்சி ஆகியவற்றின் மூலமாக மட்டுமே வளர்ச்சியடைந்த இந்தியாவை உருவாக்க
முடியும் என்று தமிழ்நாடு உறுதியான நம்பிக்கையைக் கொண்டுள்ளது.
வெளிப்படையான நிர்வாகம், சமூக நீதி, அனைவரையும்
உள்ளடக்கிய வளர்ச்சி, இளைஞர்களுக்கு அதிகாரமளித்தல் மற்றும் சமச்சீரான முன்னேற்றம்
ஆகிய அடிப்படைக் கொள்கைகளை முன்னிறுத்தி, தமிழ்நாட்டு மக்கள் எங்கள் அரசுக்கு வரலாற்றுச்
சிறப்புமிக்க தீர்ப்பினை வழங்கியுள்ளனர். அவர்களின் நம்பிக்கையை நிறைவேற்றும் வகையில்,
தமிழ்நாட்டின் நலன்களையும் மக்களின் விருப்பங்களையும் உறுதியாகப் பாதுகாக்கும் வேளையில்,
ஒன்றிய அரசுடன் ஆக்கப்பூர்வமான ஒத்துழைப்புடன் செயல்படுவதற்கு எங்கள் அரசு தொடர்ந்து
உறுதிபூண்டுள்ளது.
உலகளாவிய அளவில் நிலவும் நிச்சயமற்ற பொருளாதார
சூழல்களுக்கு இடையிலும், இந்தியாவின் இரண்டாவது பெரிய பொருளாதாரமாகத் திகழும் தமிழ்நாடு,
தனது உறுதித்தன்மையையும் தொடர்ச்சியான வளர்ச்சியையும் வெளிப்படுத்தி வருகிறது. பல்வேறு
துறைகளை உள்ளடக்கிய வலுவான பொருளாதார அமைப்பு மற்றும் நமது தொழிலாளர்களின் உற்பத்தித்
திறனைப் பிரதிபலிக்கும் வகையிலும், 2047-க்குள் வளர்ச்சியடைந்த இந்தியாவை உருவாக்குவதற்கான
நமது அர்ப்பணிப்பை அடிக்கோடிட்டுக் காட்டும் வகையிலும், 2036-ஆம் ஆண்டிற்குள் 1.5 டிரில்லியன்
டாலர் பொருளாதாரமாக உயர்வதற்கு தமிழ்நாடு பணியாற்றி வருகிறது.
இந்தியாவின் மிகப் பெரிய வலிமை அதன் இளைய
தலைமுறை மக்கள் தொகையாகும். இந்த இளைய தலைமுறை மக்கள்தொகைப் பலனை முழுமையாகப் பயன்படுத்திக்கொள்ள,
தமிழ்நாடு கல்வி, திறன் மேம்பாடு, புத்தாக்கம் மற்றும் வேலைவாய்ப்பு ஆகிய துறைகளில்
தொடர்ந்து முதலீடு செய்யும்.
இந்த நோக்கத்தை மையமாகக் கொண்டு, ஆண்டுதோறும்
ஐந்து லட்சம் இளைஞர்களுக்கு உதவித்தொகையுடன் கூடிய பணியிடைப் பயிற்சிகள்
(Internships) மற்றும் தொழில்துறையுடன் இணைந்த திறன் பயிற்சிகளை வழங்கும் “இளைஞர் திறன்
மற்றும் வேலைவாய்ப்பு இயக்கத்தை” செயல்படுத்த விழைகிறேன்.
மேலும், ஒவ்வொரு மாவட்டத்திலும் வளர்ந்து
வரும் தொழில்நுட்பத் திறன் மையங்களை அமைப்பதற்கும், செயற்கை நுண்ணறிவு, ஆழ்தொழில்நுட்பம்
(Deep Technology), இணையப் பாதுகாப்பு, மேகக் கணினி தொழில்நுட்பம் (Cloud
Computing), மின்சார வாகனத் தொழில்நுட்பம் மற்றும் குறைக்கடத்தி தொடர்புடைய துறைகளில்
பயிற்சி அளிப்பதற்கும் ஒன்றிய அரசின் ஆதரவைக் கேட்டுக்கொள்கிறோம்.
குடிமக்களை மையமாகக் கொண்ட சேவைகள் மற்றும்
திறன் வாய்ந்த ஆட்சிமுறையை உருவாக்கும் நோக்கில் செயற்கை நுண்ணறிவைப் பயன்படுத்துவதில்
தமிழ்நாடு உறுதியுடன் செயல்பட்டு வருகிறது. இந்நோக்கை வலுப்படுத்தும் வகையில், உலகத்
தரத்திலான தொடக்க நிறுவன வளர்ப்பு மையங்களை அமைப்பதற்கும், ஆழ்தொழில்நுட்ப நிறுவனங்களுக்கான
துணிகர முதலீட்டு சூழலை உருவாக்குவதற்கும், பயன்பாட்டு ஆராய்ச்சிகளுக்கான நிதி ஒதுக்கீட்டை
அதிகரிப்பதற்கும் ஒன்றிய அரசின் ஆதரவைக் கேட்டுக்கொள்கிறோம்.
அதேபோல், நமது மாணவர்களின் உரிமைகளைப் பாதுகாப்பதில்
தமிழ்நாடு அரசு உறுதியாக உள்ளது. இளநிலை மருத்துவம் மற்றும் பல் மருத்துவப் படிப்புகளுக்கான
சேர்க்கைக்காக நடத்தப்படும் தேசிய தகுதி மற்றும் நுழைவுத் தேர்வை (NEET) தமிழ்நாடு
அரசு எதிர்க்கிறது. ஏனெனில், இந்தத் தேர்வு அறிமுகப்படுத்தப்பட்ட பின்னர், கிராமப்புற
மாணவர்களும், சமூக மற்றும் பொருளாதார ரீதியாக பின்தங்கிய குடும்பங்களைச் சார்ந்த மாணவர்களும்
பாதிக்கப்பட்டுள்ளனர்.
மேற்கண்ட சூழ்நிலைகளைக் கருத்தில் கொண்டு,
மருத்துவம் மற்றும் அறுவை சிகிச்சையில் இளங்கலைப் பட்டம் (MBBS), பல் மருத்துவம் மற்றும்
அறுவை சிகிச்சை இளங்கலைப் பட்டம் (BDS) மற்றும் ஆயுர்வேதம், யோகா, யுனானி, சித்தா மற்றும்
ஹோமியோபதி மருத்துவப் (AYUSH) படிப்புகளில் மாநில ஒதுக்கீட்டின் கீழ் உள்ள அனைத்து
இடங்களையும் பன்னிரண்டாம் வகுப்பு பொதுத்தேர்வு மதிப்பெண்களின் அடிப்படையில் மட்டுமே
நிரப்புவதற்கு தமிழ்நாடு அரசுக்கு அனுமதி வழங்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.
பொருளாதார வளர்ச்சி என்பது ஒவ்வொரு குடிமகனின்
வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்துவதாக இருக்க வேண்டும் என்ற உறுதியான நம்பிக்கையை தமிழ்நாடு
கொண்டுள்ளது. அதனை முன்னிறுத்தி, எளிதில் பாதிக்கப்படக்கூடிய குடும்பங்களை அடையாளங்கண்டு,
அனைத்து நலத்திட்டங்களையும் ஒருங்கிணைத்து நிலையான வாழ்வாதார வாய்ப்புகளை உறுதி செய்யும்
வகையில், “வறுமையற்ற தமிழ்நாடு இயக்கம்” ஒன்றை எங்கள் அரசு முன்மொழிகிறது. மேலும்,
அனைவருக்கும் வீடு என்ற கனவை நிறைவேற்றுவதற்காக ஒன்றிய அரசின் நிதி உதவியையும் அன்புடன்
நாடுகிறேன்.
உயர்தர மருத்துவச் சிகிச்சையை மேலும் வலுப்படுத்தவும்,
உலகத்தரம் வாய்ந்த மருத்துவக் கல்வியை வழங்கவும், தரமான மருத்துவ சேவைகள் மக்களுக்கு
எளிதில் கிடைத்திடவும், தமிழ்நாட்டிற்கு இரண்டாவது எய்ம்ஸ் மருத்துவமனையை கோயம்புத்தூரில்
அமைக்க அனுமதிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன். இதற்குத் தேவையான நிலத்தை மாநில அரசு வழங்கும்.
தமிழ்நாட்டின் வளர்ச்சிப் பயணம் என்பது பெண்களை
மையப்படுத்தியே அமைந்துள்ளது. அவர்களுக்கு அதிகாரமளித்தல் என்பது வெறும் சமூக நோக்கமல்ல;
அது ஒரு பொருளாதார அவசியமாகும். பெண்களின் கல்வி, சுகாதாரம், பாதுகாப்பு மற்றும் பொருளாதார
முன்னேற்றத்தில் தமிழ்நாடு குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தை எட்டியுள்ளது. மேலும், மகளிர்
சுயஉதவிக் குழுக்கள் சமூக வளர்ச்சி மற்றும் சமூக பொருளாதார மாற்றத்திற்கான வலிமையான
கருவிகளாகத் திகழ்கின்றன.
இந்தியாவில் தொழிற்சாலைகளில் பணிபுரியும்
பெண்களில் 42 விழுக்காடு பெண்கள் தமிழ்நாட்டில் உள்ளனர். பெண்களின் பாதுகாப்பை மேலும்
வலுப்படுத்தும் நோக்கில், சிறப்பு பெண்கள் பாதுகாப்புப் பிரிவுகள், பொதுப் போக்குவரத்தில்
அவசரகால நடவடிக்கை அமைப்புகள், விரிவாக்கப்பட்ட கண்காணிப்பு கேமரா வலைப்பின்னல்கள்
(CCTV Networks) மற்றும் ஒருங்கிணைந்த கட்டுப்பாட்டு மையங்கள் ஆகியவற்றை அமைக்க முன்மொழிகிறோம்.
மேலும், தொழில்நுட்பம் சார்ந்த காவல் பணிகள், விரைவான நடவடிக்கைகளுக்காக “சிங்கப்பெண்
சிறப்பு அதிரடிப்படை” தொடங்கப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டின் பொருளாதாரத்திலும், கோடிக்கணக்கான
மக்களின் வாழ்வாதாரத்திலும் விவசாயம் முக்கியப் பங்காற்றுகிறது. விவசாயிகள் எதிர்கொள்ளும்
சிரமங்களை உணர்ந்து, குறு, சிறு மற்றும் பிற விவசாயிகளை உள்ளடக்கிய வகையில் ரூ.2,045
கோடி மதிப்பிலான கூட்டுறவு பயிர்க்கடன் தள்ளுபடித் திட்டத்தை தமிழ்நாடு அரசு அண்மையில்
அறிவித்துள்ளது.
நமது கடலோர மீனவ சமுதாயங்களின் வாழ்வாதாரமும்
பாதுகாப்பும் சமமான முக்கியத்துவம் வாய்ந்தவை. பாக் வளைகுடாப் பகுதியில் இந்திய மீனவர்களின்
பாரம்பரிய மீன்பிடி உரிமைகளைப் பாதுகாப்பதையும், அவர்களின் பாதுகாப்பு மற்றும் பாதுகாப்பான
சூழலை உறுதி செய்வதையும், அவர்களிடமிருந்து பறிமுதல் செய்யப்பட்ட மீன்பிடிப் படகுகளை
விடுவிப்பதையும் உறுதி செய்யுமாறு இந்திய அரசை நான் வலியுறுத்துகிறேன்.
மேலும், இலங்கை மற்றும் பாகிஸ்தானில் சிறைபிடிக்கப்பட்டுள்ள
தமிழ்நாட்டு மீனவர்களை விடுவிக்கவும், அவர்கள் தங்கள் குடும்பத்தினரிடம் பாதுகாப்பாகத்
திரும்புவதை உறுதி செய்யவும் தூதரக நடவடிக்கைகளை விரைந்து மேற்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன்.
தமிழ்நாட்டின் 1,076 கிலோ மீட்டர் நீள கடற்கரைப்
பகுதி அடிக்கடி புயல்கள் மற்றும் வெள்ளப் பேரிடர்களால் பாதிக்கப்படுகிறது. இதனைக் கருத்தில்
கொண்டு, கடற்கரை நகரங்களில் நிரந்தர வெள்ளத்தடுப்புக் கட்டமைப்புகளை உருவாக்குவதற்கும்,
உயிரிழப்பில்லா பேரிடர் மேலாண்மை இயக்கத்தைச் செயல்படுத்துவதற்கும், காலநிலை மாற்றத்தை
எதிர்கொள்ளக்கூடிய உட்கட்டமைப்புகளை உள்ளடக்கிய “காலநிலைத் தாங்குதன்மை பெருந்திட்டம்
2045” கீழ் ஒன்றிய அரசின் மேம்பட்ட ஆதரவையும் தமிழ்நாடு நாடுகிறது.
மேலும், குலசேகரபட்டினத்தில் இந்திய விண்வெளித்
துறை (IN-SPACe) உடன் இணைந்து நிறுவப்பட்டுள்ள விண்வெளி உற்பத்தி மையத்தை தேசிய விண்வெளி
உற்பத்தி மையமாக அறிவிக்க வேண்டும் என இந்திய அரசின் கவனத்தையும் ஆதரவையும் தமிழ்நாடு
எதிர்பார்க்கிறது. இதன் மூலம் உந்துபொருள் முதல் ஏவு வாகனங்கள் தயாரிப்பு வரை முழுமையான
உற்பத்தித் திறன் உருவாகி, உலக விண்வெளிப் பொருளாதாரத்தில் இந்தியா முக்கியப் பங்காற்றும்
வாய்ப்பு ஏற்படும்.
தமிழ்நாட்டின் விரைவான பொருளாதார வளர்ச்சிக்கு
முக்கிய தேசிய நெடுஞ்சாலைகள் மற்றும் இரயில் வழித்தடங்களை உரிய நேரத்தில் மேம்படுத்துவது
அவசியமாகும். எனவே, பின்வரும் திட்டங்களுக்கு ஒப்புதல் அளிக்குமாறு சாலைப் போக்குவரத்து
மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சகம் மற்றும் ரயில்வே அமைச்சகத்திடம் நான் கேட்டுக்கொள்கிறேன்:-
> ஜி.எஸ்.டி. சாலையின் (NH-32) செங்கல்பட்டு
முதல் திருச்சி வரையிலான பகுதியை ஆறு வழிச்சாலையாக மேம்படுத்துதல்.
> NH-81 திருச்சி (பஞ்சப்பூர்) – ஜீயபுரம்
– கரூர் பகுதியை ஆறு வழிச்சாலையாக மேம்படுத்துதல்.
> NH-81 கரூர் – கோயம்புத்தூர் பகுதியை
ஆறு வழிச்சாலையாக மேம்படுத்துதல்.
> NH-87 மாதவரம் – சோழவரம் இடையே உயர்த்தப்பட்ட
வழித்தடம் அமைத்தல்.
> சென்னை முதல் கன்னியாகுமரி வரை அதிவேக
ரயில் வழித்தடம் அமைத்தல்.
எண்மிய (Digital) இணைப்பு வசதியைப் பொறுத்தவரை,
தமிழ்நாட்டில் பாரத்நெட் இரண்டாம் கட்டத் திட்டம் சுமார் 97 சதவீதம் நிறைவடைந்துள்ளது.
எனவே, மீதமுள்ள கடைசிக் கட்ட இணைப்பு சவால்களைத் தீர்க்கவும், வலைப்பின்னல்
(Network) செயல்பாடுகளைத் தொடர்ச்சியாக நிலைநிறுத்தவும், அனைத்து கிராமப் பஞ்சாயத்துகளும்
இணைய இணைப்புடன் இணைக்கப்படுவதையும் உறுதி செய்ய இந்திய அரசின் ஆதரவை நான் கேட்டுக்கொள்கிறேன்.
மேலும், ஒகேனக்கல் மூன்றாம் கட்டக் கூட்டுக்குடிநீர்
வழங்கல் திட்டத்திற்காக ரூ.2,283.40 கோடி அளவிலான உறுதியளிக்கப்பட்ட ஒன்றிய நிதி உதவியை
வழங்குமாறு இந்திய அரசை நான் கேட்டுக்கொள்கிறேன்.
நிதி பொறுப்புணர்வு, சமூக முன்னேற்றம் மற்றும்
மக்கள் தொகை நிலைநிறுத்தல் ஆகியவற்றில் சிறப்பாகச் செயல்பட்ட மாநிலங்கள் உரிய அங்கீகாரத்தையும்
போதுமான ஆதரவையும் பெற வேண்டும்; இம்மாநிலங்கள் எந்த வகையிலும் பாதிக்கப்படக்கூடாது.
மாநில அரசின் ஊரக வீட்டுவசதித் திட்டங்களுக்கும்,
ஒன்றிய அரசின் வளர்ச்சியடைந்த இந்தியா – வேலைவாய்ப்பு மற்றும் வாழ்வாதாரத்திற்கான உத்திரவாதத்
திட்டத்தின் (கிராமப்புறம்) (VB-G RAM-G) கீழ் வேலைவாய்ப்பு உருவாக்க நடவடிக்கைகளை
மேற்கொள்ள அனுமதிக்குமாறு இவ்வாய்ப்பின் மூலம் ஒன்றிய அரசைக் கேட்டுக்கொள்கிறேன்.
மாணவர்களின் நலன், கல்விச் சேவைகளின் தொடர்ச்சி
மற்றும் கூட்டுறவு கூட்டாட்சித் தத்துவத்தைப் பாதுகாத்தல் ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு,
‘ஒருங்கிணைந்த கல்வி’ (Samagra Shiksha) திட்டத்தின் கீழ் நிலுவையில் உள்ள ரூ.3,284
கோடி நிதியை, எவ்வித நிபந்தனைகளுமின்றியும், புதிய கல்விக் கொள்கையைச் செயல்படுத்தவோ
அல்லது மும்மொழிக் கொள்கையை அமல்படுத்தவோ வற்புறுத்தாமலும் விரைவாக விடுவிக்குமாறு
இந்திய அரசை நான் கேட்டுக்கொள்கிறேன்.
நவீன இந்தியாவின் மதச்சார்பற்ற விழுமியங்களுக்கு
தனித்துவமாக விளங்கும் தொன்மையான நூலான திருக்குறளை தேசிய இலக்கியமாக அறிவிக்குமாறு
இந்திய அரசிடம் இம்மன்றத்தின் முன் கோரிக்கை விடுக்க விழைகிறேன்.
மாநிலங்கள் வலுப்பெறும்போது, இந்தியாவும்
வலிமை பெறுகிறது என்று தமிழ்நாடு உறுதியாக நம்புகிறது. கூட்டாண்மை, ஒருவருக்கொருவர்
மதித்தல் மற்றும் பகிரப்பட்ட பொறுப்புணர்வு ஆகியவற்றின் வாயிலாக, நாம் அனைவரும் இணைந்து
ஒரு வளமான, சமத்துவமிக்க, புதுமையான மற்றும் நிலையான இந்தியாவை உருவாக்க முடியும்”
என்று பேசினார்.
