Share via:
சமீபத்தில் நடைபெற்ற தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜக எதிர்பார்த்த
வெற்றியை பெற முடியவில்லை. அதனால் தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு கட்சியின் மாநிலத்
தலைவர் நயினாரை மாற்ற வேண்டும் என்ற கோரிக்கை கட்சியின் பல்வேறு மட்டங்களில் இருந்து
எழுந்தது.
இதையடுத்து, தமிழக பாஜகவின் அடுத்தகட்ட அரசியல் பாதையைத் தீர்மானிக்கும்
மையக்குழு கூட்டம், பாஜக தேசியத் தலைவர் நிதின் நபின் மற்றும் மத்திய உள்துறை அமைச்சர்
அமித் ஷா ஆகியோர் தலைமையில் டெல்லியில் சமீபத்தில் நடந்தது.
இதில், மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன், மத்திய அமைச்சர் எல்.முருகன்,
மாநிலப் பொருளாளர் எஸ்.ஆர்.சேகர், முன்னாள் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன், மாநிலப்
பொதுச் செயலாளர் ஏ.பி.முருகானந்தம் மற்றும் ஹெச்.ராஜா, தமிழிசை சவுந்தரராஜன், வானதி
சீனிவாசன், கார்த்தியாயினி, பேராசிரியர் ராம சீனிவாசன் உள்ளிட்ட மையக்குழு உறுப்பினர்கள்
கலந்துகொண்டனர்.
இந்தக் கூட்டத்தில், சட்டப் பேரவை தேர்தல் தோல்விக்கான காரணங்கள்,
உட்கட்சி செயல்பாடுகள் உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் குறித்து விவாதிக்கப்பட்டன. அதோடு
மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரனின் செயல்பாடுகள் குறித்து கட்சிக்குள் ஆய்வு நடத்தப்பட்டதாகவும்
தகவல்கள் வெளியாகின.
இந்த நிலையில் அடுத்த தலைவர் யார் என்ற போட்டியில் ராம சீனிவாசன்,
அர்ஜுன மூர்த்தி, ஏ.பி. முருகானந்தம், வினோஜ் செல்வம் உள்ளிட்ட பலர் பதவிக்கான போட்டியில்
இருக்கிறார்கள்.
தமிழக பாஜகவின் முகமாக இருந்து வந்த அண்ணாமலை, கட்சியில் இருந்து
விலகி புதிய இயக்கத்தை தொடங்கியிருப்பது பாஜக தலைமைக்கு எதிர்பாராத சவாலாக மாறியுள்ளது.
இந்த நிலையில் இவர்களால் அண்ணாமலையை சமாளிக்க முடியாது என்பதால் மீண்டும் எல்.முருகன்
அல்லது தமிழிசை செளந்தரராஜனுக்கு வாய்ப்பு கொடுக்கலாமா என்று டெல்லி யோசிக்கிறது.
ஆனால், மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் மூலமாக இந்த பதவியை
வானதி கைப்பற்றுகிறார் என்றே சொல்லப்படுகிறது. வானதிக்கே அதிகம் வாய்ப்பு இருப்பது
உறுதியாகிவிட்டது.
விரைவில் மத்திய அமைச்சரவை மாற்றி அமைக்கப்பட இருக்கும் சூழலில், எல்.முருகன் இணையமைச்சர்
பதவியில் இருந்து விடுவிக்கப்பட்டு நயினார் நாகேந்திரன் அமைச்சராக்கப்படலாம் என்றும்
கூறப்படுகிறது.
அப்படி என்றால் தமிழகத்தில் தாமரை மலரவே மலராதா..?
