Share via:
முதலீடுகளை ஈர்க்க விஜய் அரசு கையில் எடுத்த புதிய திட்டத்துக்கு
ஆளுநர் அர்லேகர் ஒப்புதல் கொடுத்திருப்பதை அடுத்து தொழில்துறை அபார வளர்ச்சி அடையும்
என்கிறார்கள். 21 நாட்களில் புதிய தொழில்துறைக்கு அனைத்து வகையான அனுமதி கிடைத்துவிடும்
என்பதால் முதலீடுகள் அதிகரிக்கும்.
தவெக அரசும் முதலீடுகளை ஈர்க்க பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
அதன் ஒரு பகுதியாக தமிழ்நாடு வணிக எளிதாக்கல் (திருத்த) சட்டம், 2026ஐ தமிழ்நாடு அரசு
கொண்டு வந்திருந்தது. இந்த சட்ட திருத்தத்தின் முக்கிய அம்சமாக, தமிழ்நாடு முதலீட்டு
ஊக்குவிப்பு ஆணையம் என்ற புதிய அமைப்பு உருவாக்கப்படுகிறது.
இந்த ஆணையத்தின் தலைவராக தமிழக அரசின் தலைமை செயலாளர் இருப்பார்.
தொழில்கள், முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும்
வர்த்தக துறையை கவனிக்கும் அரசு செயலாளர், ஆணையத்தின் உறுப்பினர் ஒருங்கிணைப்பாளராக
இருப்பார். இதுதவிர அரசு வகுக்கும் நடைமுறைகளின்படி அதிகபட்சமாக 20 உறுப்பினர்கள் வரை
நியமிக்கப்படலாம்.
மாநிலத்துக்கு அதிக அளவில் முதலீட்டையும் வேலை வாய்ப்பையும் உருவாக்கக்கூடிய
முக்கிய திட்டங்களை இந்த ஆணையம் தொடர்ந்து கண்காணிக்கும். குறிப்பாக, ரூ.200 கோடி அல்லது
அதற்கு மேல் மூலதன முதலீடு செய்யப்படும் திட்டங்கள், குறைந்தபட்சம் 5,000 பேருக்கு
வேலைவாய்ப்பு உருவாகும் என எதிர்பார்க்கப்படும் திட்டங்கள், எப்.டி.ஏ. வர்த்தக ஒப்பந்தங்களுடன்
தொடர்புடைய முதலீடுகள், இந்தியாவுக்கு வெளியே வசிக்கும் தமிழர் வம்சாவளியினரின் முதலீடுகள்
ஆகியவை முக்கிய முதலீட்டு திட்டங்களாகக் கருதப்படும்.
முதலீட்டு திட்டம் தொடங்குவதற்கு முன்பான கட்டத்தில் இருந்து,
திட்டம் முழுமையாக செயல்பாட்டுக்கு வந்து உற்பத்தி அல்லது வணிக நடவடிக்கைகள் தொடங்கும்
நிலை வரை அனைத்தையும் இந்த ஆணையம் தொடர்ந்து ஆய்வு செய்யும்.
பெரிய முதலீட்டு திட்டங்களுக்கு தேவைப்படும் அரசு அனுமதிகள், சலுகைகள்
மற்றும் பிற ஒப்புதல்கள் உரிய நேரத்தில் கிடைப்பதை உறுதி செய்வதற்காக சம்பந்தப்பட்ட
துறைகளுக்கு ஆணையம் உத்தரவுகளையும் பிறப்பிக்க முடியும். தொழில் திட்டங்களுக்காக ஏற்கெனவே
ஒதுக்கப்பட்டிருந்தும் இன்னும் வணிக நடவடிக்கைகள் தொடங்கப்படாத நிலங்களின் ஒதுக்கீடு
மற்றும் பயன்பாடு குறித்தும் ஆணையம் ஆய்வு மேற்கொள்ளும்.
தமிழ்நாட்டில் முதலீடு செய்வதற்கும் தொழில் தொடங்குவதற்கும் சாதகமான
சூழலை உருவாக்கும் வகையில் கொள்கைகள், விதிமுறைகள் மற்றும் நிர்வாக நடைமுறைகளில் செய்ய
வேண்டிய மாற்றங்கள் குறித்தும் இந்த ஆணையம் தமிழக அரசுக்கு பரிந்துரைகளை வழங்கும்.
எந்தவொரு சிக்கலான அனுமதியாக இருந்தாலும் அதிகபட்சம் 21 நாட்களுக்கு அந்த அனுமதி வழங்கப்படும்
என்பதே இந்த சட்டத்தின் நோக்கமாகும். இதன் மூலம் முதலீடுகளை அதிகரிக்க முடியும் என்பதே
விஜய் அரசின் திட்டம்!

