Share via:
தமிழக முதல்வர் சி. ஜோசப் விஜய், தமிழக அரசு மருத்துவமனைகளில்
பிறக்கும் பச்சிளம் குழந்தைகளுக்கு 1 கிராம் தங்க மோதிரம் வழங்கும் ‘தாய்மாமன் தங்க
மோதிரம்’ திட்டத்தை மதுரை மாவட்டம், உசிலம்பட்டியில் வரும் 28ம் தேதி தொடங்கி வைக்க
உள்ளார் என்று அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதன் மூலம் அரசு மருத்துவமனைகளில் பிறக்கும் குழந்தைகளுக்குப்
பாரம்பரிய ‘தாய்மாமன் சீர்’ முறையை நினைவூட்டும் வகையில், தலா 13,600 ரூபாய் மதிப்பிலான
1 கிராம் (22 கேரட்) தங்க மோதிரம் அரசு சார்பில் பரிசாக வழங்கப்படுகிறது. இத்திட்டத்தைச்
செயல்படுத்துவதற்காக ஆண்டுதோறும் 755.83 கோடி ரூபாய் நிதியை ஒதுக்கீடு செய்துள்ளது.
2026 ஜூன் 22-ஆம் தேதிக்குப் பிறகு அரசு மருத்துவமனைகளில் பிறந்த
அனைத்து குழந்தைகளும் இத்திட்டத்தின் கீழ் பயன்பெற தகுதி பெற்றுள்ளனர். இத்திட்டம்
முதலில் செப்டம்பர் 15 அன்று தொடங்கப்படுவதாக இருந்தது. முதலமைச்சர் விஜயின் லண்டன்
பயணம் காரணமாகத் தேதி மாற்றப்பட்டு, தற்போது செப்டம்பர் 28ம் தேதியன்று உசிலம்பட்டி
அரசு மருத்துவமனையில் வைத்து முறைப்படி தொடங்கி வைக்கப்பட உள்ளது.
தமிழகத்திலேயே தாய்மாமன் சீர் முறைக்கு மிகவும் பெயர் பெற்ற பகுதி
உசிலம்பட்டி என்பதால், இத்திட்டத்தைத் தொடங்க இந்த இடம் பொருத்தமாக இருக்கும் எனத்
தேர்வு செய்யப்பட்டுள்ளது.
இத்திட்டத்தின் கீழ், 22.06.2026 அன்று முதல் அரசு மருத்துவமனைகளில்
பிறந்த ஒவ்வொரு குழந்தைக்கும் ஒரு கிராம் தங்க மோதிரம் வழங்கப்படும். இதற்கான அரசாணை
23.06.2026 அன்று வெளியிடப்பட்டது. தமிழ்நாட்டில் ஆண்டுதோறும் 7.80 இலட்சம் குழந்தைகள்
பிறக்கின்றன. இவற்றில் 99.9 சதவீத பிரசவங்கள் மருத்துவமனைகளில் நடைபெறுகின்றன என்று
தேசிய குடும்ப நலக் கணக்கெடுப்பு-6ல் பதிவாகியுள்ளது. இவற்றில் 4.20 இலட்சம் பிரசவங்கள்
(53%) அரசு மருத்துவமனைகளில் நிகழ்கின்றன. அதில் 90 சதவீதம் சீமாங் மையங்களில்
(CEmONC Centres) நடைபெறுகின்றன. இதன்மூலம், பாதுகாப்பான பிரசவம் மற்றும் ஆரோக்கியமான
குழந்தைகளின் பிறப்பை உறுதி செய்வதில் பொது சுகாதார அமைப்பு முக்கியப் பங்கு வகிக்கிறது.
ய்மாமன் தங்க மோதிரம் திட்டத்தின் கீழ், அரசு மருத்துவமனைகளில்
பிறக்கும் அனைத்துக் குழந்தைகளுக்கும் ஒரு கிராம் எடை கொண்ட தங்க மோதிரம் வழங்கப்படும்.
அதற்கென தனித்துவமான வரிசை எண்ணும் சேதப்படுத்த முடியாத பாதுகாப்புப் பெட்டகமும் வழங்கப்படும்.
இத்திட்டத்திற்காக முதல் தவணையாக 1,28,000 தங்க மோதிரங்கள் கொள்முதல் செய்யப்பட்டுள்ளன.
இத்திட்டம் தமிழ்நாடு முதலமைச்சரால் 28.09.2026 அன்று தொடங்கி
வைக்கப்படவுள்ளது. மேலும், அரசு மருத்துவமனைகளில் 22.06.2026 முதல், திட்டம் தொடங்கப்படும்
நாள் வரை பிறக்கும் குழந்தைகளுக்கு 107 மையங்களில் தினமும் 100 குழந்தைகள் வீதம்
28.09.2026 முதல் வழங்க உரிய ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இத்திட்டம் தமிழ்நாடு முதலமைச்சரால்
தொடங்கப்படும் நாளிலிருந்து அரசு மருத்துவமனைகளில் பிறந்த குழந்தைகளுக்கு மருத்துவமனையிலிருந்து
வீடு திரும்பும்போது தங்க மோதிரம் வழங்கப்படும்.

