Share via:
இடைத்தேர்தலை திமுக புறக்கணித்துவிடும் என்று பேசப்பட்ட நிலையில்,
இன்று கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தினார் ஸ்டாலின். இதையடுத்து தாராபுரம் மற்றும்
மதுராந்தகம் தொகுதிகளுக்கான இடைத் தேர்தலுக்கான வேட்பாளர்களை முதல் கட்சியாக திமுக
அறிவித்துள்ளது. மதுராந்தகம் தொகுதியில் ஐ.பரந்தாமனும் தாராபுரத்தில் சுகன்யாவும் போட்டியிடுவதாக
அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த இரண்டு தொகுதிகளும் அதிமுக வசம் இருந்த நிலையில் அவர்கள்
இருவரும் தமிழக வெற்றிக் கழகத்தில் பதவிக்காக இணைந்திருந்தனர். இதனை அடுத்து இந்த தொகுதிகள் காலியானதாக அறிவிக்கப்பட்டிருந்தது.
ஸ்டாலின் போலவே எடப்பாடி பழனிசாமியும் சுறுசுறுப்படைந்துள்ளார்.
ஏனென்றால், இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்ட மதுராந்தகம்,
தாராபுரம் ஆகிய இரண்டு தொகுதிகளுமே அஇஅதிமுக வெற்றி பெற்ற தொகுதிகள். அதனால் இந்த முறையும்
வேட்பாளர்களை நிறுத்துவோம், வெற்றி பெறுவோம் என்று கூறியுள்ளார்.
மதுராந்தகம் சட்டமன்றத் தொகுதியில் 2011 ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற
தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிட்டு சுமார் 19 ஆயிரம் ஓட்டு வித்தியாசத்தில் வெற்றி
பெற்றவர் கனிதா சம்பத் வேட்பாளராக அறிவிக்கப்படுவார் என்று தெரிகிறது.
அதேபோல், தாராபுரம் தொகுதியில் பி. மகேஷ்குமார், வழக்கறிஞர் அபிராமி,
ராஜா வின்சென்ட் ஆகியோரில் ஒருவர் தேர்வு செய்யப்பட வாய்ப்பு என்கிறார்கள்.
இந்நிலையில் விஜய் வேட்பாளர் யார் என்பதில் ஒரு குழப்பம் இருக்கிறது.
ஏனென்றால், மீண்டும் இடைத்தேர்தலில் எம்.எல்.ஏ. வாய்ப்பு வழங்கப்படும் என்று வாக்குறுதி
கொடுக்கப்பட்டே மரகதம் குமரவேல் மற்றும் சத்யபாமா ஆகிய இருவரும் ராஜினாமா செய்ததாக
சொல்லப்படுகிறது.
ஆனால், இப்போது அவர்கள் மீது மக்களுக்கு வெறுப்பு இருப்பதாக சொல்லப்படுவதால்
புதிய வேட்பாளர்களை நியமிக்க விஜய் முடிவு செய்திருக்கிறாராம். நாளை வெளிநாடு போவதற்குள்
வேட்பாளர் அறிவிப்பு வந்துவிடும் என்கிறார்கள்.
இந்நிலையில், சட்டமன்றத்தில் முதலமைச்சரின் ஆணவப் பேச்சைக் கண்டித்து
தி.மு.க. சார்பில் வருவாய் மாவட்டத் தலைநகரங்களில் 12.09.2026 சனிக்கிழமை அன்று மாபெரும்
கண்டன ஆர்ப்பாட்டத்தை திமுக அறிவித்துள்லது.
திரையுலக மோகம், கவர்ச்சி மூலமாக மக்களை மயக்கி, போலியான பிம்பத்தை
சமூக ஊடகங்களின் மூலமாகக் கட்டமைத்து – குழந்தைகளை ஏமாற்றி குடும்பத்துக்குள் குழப்பங்களை
ஏற்படுத்தி – போலி வாக்குறுதிகள் அளித்து ஆட்சியைக் கைப்பற்றி – அதுவும் ஆட்சி அமைக்கும்
வலிமையைப் பெறமுடியாத மைனாரிட்டி நிலைமை என்பதால் – தி.மு.க. கூட்டணியில் வென்றவர்களுக்கு
அமைச்சர்கள் பொறுப்புகளைக் கொடுத்து அவர்களது ஆதரவைப் பெற்று – அதிமுக சார்பில் வென்றவர்களுக்கும்
அமைச்சர் பதவி தருவதாக ஏமாற்றி குதிரை பேரம் நடத்தி, முதலமைச்சராகியிருக்கிறார் நடிகர்
விஜய்.
இப்பொறுப்புக்கு வந்த பிறகு பொறுப்பை உணர்ந்து செயல்பட்டாரா? என்றால்
இல்லை. மக்களுக்கு கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை. ஒரு சில வாக்குறுதிகளை அரைகுறையாகச்
செய்து ஏமாற்றி வருகிறார். திராவிட மாடல் ஆட்சி மூலமாக கழகத் தலைவர் மு.க.ஸ்டாலின்
அவர்களால் கொண்டு வரப்பட்ட திட்டங்களை நிறுத்தினார். நிறுத்த முடியாத திட்டங்களுக்கு
பெயரை மாற்றி, ஸ்டிக்கர் ஒட்டும் வேலையைச் சிறப்பாகச் செய்து வருகிறார்.
கொலை – கொள்ளை அதிகமாகிவிட்டது. போதை பொருள் நடமாட்டமும் – பாலியல்
வன்முறையும் அதிகமாகிவிட்டது. பல்வேறு குற்றச்செயல்களில் த.வெ.க. நிர்வாகிகளே சிக்கி
வருகிறார்கள். அதற்கு எந்த நடவடிக்கை எடுக்காமல், அவர்களை பாதுகாக்கும் வேலையில் ஈடுபடுகிறார்கள்.
‘தெரியாமல் ஓட்டுப் போட்டுவிட்டோம்’ என்று மக்கள் வருந்திச் சொல்லி வருகிறார்கள். இதில்
இருந்து திசை திருப்புவதற்காக தனது டயலாக் சூட்டிங் மேடையாக தமிழ்நாடு சட்டமன்றத்தை
முதலமைச்சர் மாற்றி விட்டார். திராவிட முன்னேற்றக் கழகத்தையும், ஐந்து முறை இந்த நாட்டை
ஆண்ட முதலமைச்சர் தலைவர் கலைஞரையும் – இந்தியாவின் புகழை தோகா மாநாட்டில் நிலைநாட்டிய
பொருளாதார மேதை முரசொலி மாறனையும்,
திருமணம் ஆன ஐந்தே மாதத்தில், 23 வயதில் MISA (Maintenance of
Internal Security Act) அவசரநிலைச் சட்டத்தில் கைதாக்கப்பட்டு சிறைச்சாலை சித்திரவதைகளை
அனுபவித்து, ஓராண்டு காலம் சிறையில் இருந்த தியாகத்தைச் செய்த தலைவர் மு.க.ஸ்டாலின்
அவர்களின் தியாகத்தை கொச்சைப்படுத்தி தமிழ்நாடு சட்டமன்றத்தில் விஜய் பேசிய பேச்சு
கடுமையான கண்டனத்துக்குரியது. அரசியல் உலகில் இத்தகைய அருவெறுப்பான உரையை சட்டமன்றம்
கண்டிருக்காது. அவரது உரை மூலமாக சட்டமன்றத்தின் மாண்பு – மரபு – வரலாறு இவை அனைத்தும்
காற்றில் பறக்கிறது.
படங்களாக அந்த அவையில் நிற்கிறவர்கள் தலைகவிழ்ந்து கண்ணீர் வடித்திருப்பார்கள்.
சில அமைச்சர்கள் சட்டமன்றத்தில் தான் பேசுவது தவறு என்று தெரிந்தே பேசி, ‘மீம்ஸ்’,
‘ரீல்ஸ்’-ஐ வெளியிடுகிறார்கள். நேரலை மூலமாக மக்களை சென்றடைந்த பிறகு அதை ஒப்புக்கு
அவைக்குறிப்பில் இருந்து நீக்கிக் கொள்கிறார்கள். இப்படியாக தந்திர மேடையாக சட்டசபையை
த.வெ.க. அரசு பயன்படுத்துகிறது. ஆட்சியின் தோல்விகளுக்கு பதில் சொல்ல முடியாமல் தப்பித்துக்
கொள்ள, கொச்சையான பேச்சுகளைப் பேசும் தரமற்ற மனிதராக முதலமைச்சர் விஜய் மாறியிருக்கிறார்.
இவரது இப்பேச்சைக் கண்டிக்கும் வகையில், தி.முக.. சார்பில் வருவாய்
மாவட்டத் தலைநகரங்களில் வருகிற 12.09.2026 சனிக்கிழமை அன்று காலை 10.30 மணியளவில் மாவட்டக்
கழகச் செயலாளர்கள் தலைமையில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும்’’ என்று அறிவித்துள்ளார்கள்.

