Share via:
சட்டத்தின் பிடியில் சிறுத்தைகள் தப்பியோடுவதும், முயல்கள் சிக்கிக்கொள்வதும்
வழக்கம். நாட்டை ஏமாற்றிய மிகப்பெரும் தொழிலதிபர்கள், மும்பை டான்கள், கொலைக் குற்றம்
சாட்டப்பட்ட சாமியார்கள் எல்லாம் வெளிநாடுகளில் நிம்மதியாக இருக்கிறார்கள். ஆனால்,
அறியாமல் செய்த சாதாரண குற்றத்துக்காக 31 ஆண்டுகள் சிறையில்கழித்த பேரறிவாளன் இப்போது
வழக்கறிஞராக புதிய அவதாரம் எடுத்துள்ளார்.
மறைந்த முன்னாள் பிரதமா் ராஜூவ் காந்தி வழக்கில் கடந்த 2022ம்
ஆண்டு விடுதலை செய்யப்பட்ட பேரறிவாளன், சட்டப்படிப்பில் சோ்ந்து படித்து முடித்து,
தற்போது சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கறிஞராகப் பணியாற்றுவதற்காகத் தமிழ்நாடு மற்றும்
புதுச்சேரி பார் கவுன்சிலில் பதிவு செய்துள்ளார்.
இது ஒரு சாதாரண போராட்டம் இல்லை. மரணத்தின் பிடியில் இருந்து தப்பி
வந்திருக்கிறார். 1991ல் கைது செய்யப்பட்ட பேரறிவாளன், நீண்ட சட்டப் போராட்டத்திற்குப்
பிறகு, உச்ச நீதிமன்றத்தின் 142வது சிறப்பு அதிகாரத்தைப் பயன்படுத்தி கடந்த மே
2022ல் விடுதலை செய்யப்பட்டார்.
அதன்பிறகு, பெங்களூருவில் உள்ள டாக்டர் பி.ஆர். அம்பேத்கர் சட்டக்
கல்லூரியில் சட்டம் படிக்கத் தொடங்கினார் பேரறிவாளன். தொடர்ந்து படிப்பில் கவனம் செலுத்திய
அவர் 2025-ல் பட்டம் பெற்றார். அதே ஆண்டில் அகில இந்திய பார் கவுன்ச்ல் தேர்விலும்
வெற்றி பெற்றார்
அதைத் தொடர்ந்து, நேற்று கறுப்பு அங்கி அணிந்து வழக்கறிஞராக தமிழ்நாடு
மற்றும் புதுச்சேரி பார் கவுன்சிலில் பதிவு செய்துகொண்ட பேரறிவாளன், விரைவில் சென்னை
உயர் நீதிமன்றத்தில் தனது பணியைத் தொடங்கவுள்ளார்.
இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய அவர், “நான் ஒரு புகழ்பெற்ற
கிரிமினல் வழக்கறிஞராக வேண்டும் என்று விரும்பவில்லை. சட்ட உதவி கிடைக்காமல் சிறையில்
வாடும் ஏழை எளிய கைதிகளின் குரலாக ஒலிக்கவே விரும்புகிறேன்.
ஆஸ்திரேலியா, ஜப்பான் மற்றும் அமெரிக்கா போன்ற நாடுகளில் உள்ளது
போல, தண்டனைக்குப் பிந்தைய மறுஆய்வுச் சட்டங்கள் இந்தியாவிலும் வலுப்பெற வேண்டும் என்பதே
எனது கனவு” எனக் குறிப்பிட்டுள்ளார்.
தன் வாழ்நாளில் பாதிக்கு மேற்பட்ட காலத்தை நீதிமன்ற வாசலில் ஏங்கி
நின்று, வழக்கறிஞர்களின் கறுப்பு அங்கி நம்மை பாதுகாக்கும் என்று நம்பிய பேரறிவாளன்,
இப்போது தன்னை வழக்கறிஞராகவே மாற்றிக்கொண்டது, அவரது தன்னம்பிக்கைக்கு அடையாளம்.
