Share via:
நாடாளுமன்றத்தில் தொகுதி மறுவரையறை மசோதா மீதான வாக்கெடுப்பில்
அந்த மசோதாவுக்கு போதுமான வாக்குகள் கிடைக்காமல் தோல்வி அடைந்தது. இதை எதிர்க்கட்சிகள்
பெரிதாக கொண்டாடி வருகிறார்கள்.
இதுகுறித்து ஸ்டாலின், ‘’கருப்புச் சட்டத்தை எதிர்த்துக் கருஞ்சட்டையோடு
ஆண்டிப்பட்டியில் மேடையேறினேன். வெற்றிச் செய்தி வந்ததும், மீண்டும் வெள்ளுடைக்கு மாறி,
வெடியைப் போட்டுவிட்டு திண்டுக்கல் கூட்டத்தில் மக்கள் ஆர்ப்பரிக்க மேடையேறினேன். தேனியும்,
திண்டுக்கல்லும் வழங்கும் திடமான வெற்றியோடு, மே-4 ஏழாவது முறையாகக் கழகம் மீண்டும்
ஆட்சிக்கட்டில் ஏறும்’’ என்று நம்பிக்கை தெரிவித்திருக்கிறார்.
நாடாளுமன்றத் தொகுதி மறுவரையறை, மகளிருக்கு 33% இட ஒதுக்கீடு உள்ளிட்ட
மூன்று மசோதாக்கள் நாடாளுமன்றத்தில் அறிமுகப்படுத்தப்பட்டு, இரண்டு நாட்கள் விவாதம்
நடத்தப்பட்ட நிலையில், 131வது அரசியலமைப்புத் திருத்த மசோதா வாக்கெடுப்புக்கு விடப்பட்டது.
இதில் பிரதமர் நரேந்திர மோடி, எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி
உள்ளிட்டோர் பங்கேற்று வாக்கு செலுத்தினர். இதில், 489 உறுப்பினர்கள் தங்கள் வாக்குகளை
செலுத்தினர். அதில், 278 உறுப்பினர்கள் ஆம் என்று மசோதாவுக்கு ஆதரவும், 211 உறுப்பினர்கள்
இல்லை என்று எதிராகவும் வாக்களித்தனர். இதன் காரணமாக, தேவையான மூன்றில் இரண்டு பங்கு
பெரும்பான்மையைப் பெறாததால், இந்த மசோதா சபையில் தோல்வியடைந்தது.
பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணிக்கு 297 நாடாளுமன்ற உறுப்பினர்கள்
இருந்த போதும் கூட தொகுதி மறு வரையறை மசோதா மீதான வாக்கெடுப்பில் 278 வாக்குகள் என்பது
தான் பதிவாகி இருக்கிறது எனவே பாஜகவின் கூட்டணியில் உள்ள கிட்டத்தட்ட 19 நாடாளுமன்ற
உறுப்பினர்கள் பாஜக எதிர்ப்பு நிலைப்பாட்டை எடுத்திருக்கிறார்கள்.
இந்த தோல்வியைக் கொண்டாடும் திமுகவினர், ‘’ஒன்றிய பாஜக அரசு அமைக்கும்
ஆணையம் எந்த லட்சணத்தில் செயல்படும் என்பதற்கு தேர்தல் ஆணையம் மட்டும் உதாரணம் இல்லை.
2019ல் Article 370 நீக்கிவிட்டு ஒரே நாளில் காஷ்மீரை மூன்று யூனியன் பிரதேசங்களாக
பிரித்தார்கள். அதிமுக கூட அத்தகைய கொடூர சட்ட திருத்தத்திற்கு ஆதரவு அளித்தது.
காஷ்மீரை மூன்று யூனியன் பிரதேசங்களாக பிரித்த போது “எல்லை மறுநிர்ணய
ஆணையம்” ஒன்றிய பாஜக அரசால் உருவாக்கப்பட்டது. இப்போது எப்படி டிலிமிட்டேசன் கமிஷன்
தன்னாட்சி அமைப்பு என்று உருட்டுகிறார்களோ அதே போல எல்லை நிர்ணய ஆணையக்குழுவையும் தன்னாட்சி
அமைப்பு என்றுதான் சொன்னார்கள். மறுசீரமைப்பு சட்டத்தின் கீழ் எல்லை நிர்ணயம் செய்யப்பட்டது.
ஆனால் எல்லை நிர்ணய ஆணையக்குழு மக்கள்தொகை அடிப்படையை புறக்கணித்து, தேர்தல் நடந்தால்
பாஜகவிற்கு எப்படி சாதகமாக அமையுமோ அப்படி லாவகமாக தொகுதி மறுவரை செய்துக் கொடுக்கப்பட்டது.
அப்படி ஒரு அமைப்பு கொண்டுவரும் முயற்சி தோல்வி அடைந்திருக்கிறது.
இது ஜனநாயகத்துக்குக் கிடைத்திருக்கும் வெற்றி.