Share via:
அதிமுக ஆட்சி காலத்தில் மட்டுமின்றி திமுக ஆட்சியிலும் புதுக்கோட்டை
மாவட்டத்தைத் தன் கையில் வைத்திருந்த சி.விஜயபாஸ்கருக்கு தவெகவில் டம்மி பதவி கொடுத்திருப்பதாக
புலம்பல் சத்தம் கேட்கிறது.
அ.தி.மு.க-விலிருந்து விராலிமலை தொகுதி எம்.எல்.ஏ.வாக வெற்றி பெற்ற
சி.விஜயபாஸ்கர், அந்த பதவியை ராஜினாமா செய்துவிட்டு தமிழக வெற்றிக் கழகத்தில் தன்னை
இணைத்துக் கொண்டார். இதையடுத்து விஜயபாஸ்கருக்கு கட்சியில் மிகப்பெரும் பதவி கொடுக்கப்படும்
என்ற எதிர்பார்ப்பு நிலவியது.
இந்த நிலையில், புதுக்கோட்டை மாவட்ட தவெக அமைப்பு செயலாளராக சி.விஜயபாஸ்கர்
நியமனம் செய்யப்பட்டுள்ளார். தென்காசி மாவட்ட அமைப்புச் செயலராக இசக்கி சுப்பையா நியமனம்
செய்யப்பட்டுள்ளார். அதிமுகவிலிருந்து தவெகவில் இணைந்த மற்ற தலைவர்களான கரூர் எம்.ஆர்.
விஜயபாஸ்கர், மதுராந்தகம் மரகதம் குமரவேல், நாங்குநேரி ராஜகோபால் உள்ளிட்டோருக்கு மாவட்டப்
பொறுப்போடு சேர்த்து, மாநில அளவிலான ‘துணைப் பொதுச் செயலாளர்’ பதவியும் வழங்கப்பட்டுள்ளது.
அரசியல் கட்சிகளில் மாவட்டச் செயலாளர் பதவிக்கு மட்டுமே அதிகாரம்.
மாவட்ட அமைப்புச் செயலாளர் பதவி என்பது, அந்த மாவட்டத்தில் உள்ள அனைத்து மாவட்டச் செயலாளர்களையும்
ஒருங்கிணைக்கும் ஒரு அலங்காரப் பதவிதான். இதற்கு எந்த அதிகாரமும் கிடையாது.
கட்சியில் சேர்ந்த முக்கியத் தலைவர்கள் தொடர்ந்து பதவி கேட்டு
அழுத்தம் கொடுத்ததால், அவர்களை சமாதானப்படுத்தவே தவெக தலைமை இப்படி ஒரு பதவியை அவசரமாக
உருவாக்கியுள்ளது.
கரூரில் உள்ள நான்கு சட்டமன்றத் தொகுதிகளில் ஒரு தொகுதியில் மட்டுமே
தவெக வெற்றி பெற்றது. எனவே, அங்கு கரூரில் கட்சியின் வலிமையை அதிகரிக்க எம்.ஆர். விஜயபாஸ்கருக்கு
மாவட்டப் பொறுப்புடன் சேர்த்து ‘துணைப் பொதுச் செயலாளர்’ என்ற மாநிலப் பதவியும் தூக்கிக்
கொடுக்கப்பட்டுள்ளது. ஆனால், தேடிவந்த மற்றவர்களுக்கு..?
கடம்பூர் ராஜூக்கு இதுவும் இல்லை. அதிமுகவினர் இதனை வெடி போட்டு
கொண்டாடுகிறார்கள்.