Share via:
இன்று விவசாயிகள் கடன் தள்ளுபடி, மின் கட்டணம், மேகதாது அணை மற்றும்
காவிரி நீர் விவகாரத்தில் தவெக அரசைக் கண்டித்து மாநிலம் முழுவதும் அதிமுக சார்பில்
இன்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. தஞ்சையில் நடைபெறும் ஆர்ப்பாட்டத்தில் கட்சியின் பொதுச்
செயலாளர் எடப்பாடி பழனிசாமி பங்கேற்று விஜய் அரசுக்கு கடுமையாக கண்டனம் தெரிவித்தார்.
இந்நிலையில், இந்த போராட்டத்தில் தங்கமணி கலந்துகொண்டது அதிமுவினரை குஷிப்படுத்தியிருக்கிறது.
இன்று பேசிய எடப்பாடி பழனிசாமி, ‘’விவசாயிகளுக்குப் பயிர்க்கடன்
சுமை, பாசன நீர் பற்றாக்குறை, காவிரி நீர் பிரச்சினை, உயர்ந்து வரும் உற்பத்திச் செலவு,
விளைபொருட்களுக்கு உரிய விலை கிடைக்காத நிலை என விவசாயிகள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளுக்கு
நீடித்த தீர்வு அவசியம். விவசாயி நிம்மதியாக விவசாயம் செய்யும் சூழல் உருவானால்தான்
தமிழகத்தின் கிராமப்புற பொருளாதாரமும் வலுப்பெறும். விவசாயியின் வாழ்வாதாரம் பாதுகாக்கப்பட
வேண்டும்… விவசாயத்தின் எதிர்காலம் உறுதி செய்யப்பட வேண்டும். ஆனால், ரீல்ஸ் போட்டே
காலத்தைத் தள்ளிவிட நினைக்கிறது அரசு’’ என்று கடுமையான விமர்சனத்தை வைத்தார்.
இன்று அனைத்து வருவாய் மாவட்டத் தலைநகரங்களிலும் மாஜி அமைச்சர்கள்,
மாவட்டச் செயலாளர்கள் தலைமையில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது. இந்த நிலையில்
சேலத்தில் நடந்த கூட்டத்தில் தங்கமணி கலந்துகொண்டது வேலுமணி டீமை கலங்கடித்துள்ளது.
ஏனென்றால், இன்று அதிமுக சார்பில் நடைபெறும் கண்டன ஆர்பாட்டத்தில்
கலந்துகொள்ள மாட்டோம் என முன்னாள் அமைச்சர் வேலுமணி, நத்தம் விசுவநாதன் ஆகியோர் நேற்று
கூட்டாக அறிவித்திருந்தார்கள். கண்டன ஆர்ப்பாட்டத்தை எங்கள் சொந்த மாவட்டத்தில் தலைமையேற்று
நடத்துவதற்கு பதில் தங்களுக்கு வேறு மாவட்டங்களில் போராட்டம் நடத்த அறிவுறுத்தியதால்
பங்கேற்கப் போவதில்லை என காரணம் சொன்னார்கள்.
ஆனால் எடப்பாடி பழனிசாமி உத்தரவிற்கிணங்க சேலத்தில் நடைபெறும்
கண்டன ஆர்பாட்டத்தில் முன்னாள் அமைச்சர் தங்கமணி பங்கேற்றுள்ளார். இதன் மூலம் வேலுமணி
டீமில் பிளவு ஏற்பட்டுள்ளது உறுதியாகியிருக்கிறது. தங்கமணி தற்போது எம்.எல்.ஏ.வாக இல்லாததால்
எடப்பாடி ஆதரவு நிலைப்பாடு எடுத்ததாக கூறப்படுகிறது என்றாலும், இந்த விவகாரம் வேலுமணிக்கு
கடும் நெருக்கடி கொடுத்துள்ளது. இன்னும் வேறு என்ன மாற்றங்கள் நடக்கும் என்று பார்க்கலாம்.