Share via:
இதுவரை தமிழகம் காணாத புதுமையான தேர்தல் நாளை நடைபெறுகிறது. இதுவரை
போட்டி அதிமுக, திமுக என்றே இருந்தது. முதன்முறையாக விஜய் தேர்தலில் குதித்திருக்கிறார்.
அவரது வாக்கு வங்கி எவ்வளவு என்பது இதுவரை நிரூபிக்கப்படவில்லை.
அதேநேரம், அவரை பார்ப்பதற்குக் கூடும் கூட்டமும், அவரைக் கொண்டாடும்
மக்கள் மனநிலையும் இதுவரை தமிழகம் அறியாத ஒன்று. ஸ்டாலின், எடப்பாடி பழனிசாமி ஆகியோர்
மீது மக்களுக்கு மிகவும் நல்ல அபிப்ராயம் எதுவும் இல்லை. அதனால், அவர்களுக்கு ஒரு புதிய
மாற்றம் தேவைப்படுகிறது. அது விஜய்யாக இருக்கலாம்.
நாளைய தினம் தமிழகத்தில் வாக்களிக்க இருக்கும் மொத்த வாக்காளர்கள்
எண்ணிக்கை 5.73 கோடி. இதில் ஆண்கள் 2.80 கோடி, பெண்கள் 2.93 கோடி. கூடுதலான பெண்கள்
வாக்குகள் 13 லட்சம் பேர்களில் 10 லட்சம் பெண்கள் 50 வயதிற்கு மேலானவர்கள்.
நாளைய தேர்தலில் 85 முதல் 90 சதவிகிதம் வாக்குகள் பதிவாகும் என்று
எதிர்பார்க்கப்படுகிறது. ஐந்து முனைப் போட்டி என்றே சொல்ல வேண்டும். ஸ்டாலின், எடப்பாடி,
விஜய், சீமான், ராமதாஸ் என்று ஐந்து பேர் தங்கள் பலத்தைக் காட்டுகிறார்கள்.
இன்றே வாக்காளர் பட்டியலில் பெயர் இருக்கிறதா என்பதை பரிசோதனை
செய்துகொள்ளுங்கள். வாக்காளர் பட்டியலில் பெயர் இடம்பெற்றிருந்தும் வாக்குச்சாவடியில்
வாக்காளர் புகைப்பட அடையாள அட்டையை அளிக்க இயலாத வாக்காளர்கள், அது தவிர 12 ஆவணங்களில்
ஏதேனும் ஒன்றை காண்பித்து வாக்களிக்கலாம். ஆனால் வாக்காளரின் பெயர் வாக்காளர் பட்டியலில்
இருக்க வேண்டும்.
ஆதார் அட்டை, மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்புத் திட்டத்தின்
பணியாளர் அடையாள அட்டை, புகைப்படத்துடன் கூடிய வங்கி அல்லது அஞ்சலக கணக்குப் புத்தகம்,
தொழிலாளர் நல அமைச்சகத் திட்டத்தின் கீழ் வழங்கப்பட்ட மருத்துவக் காப்பீட்டு அட்டை,
ஓட்டுநர் உரிமம், வருமான வரி நிரந்தர கணக்கு எண் அட்டை, தேசிய மக்கள் தொகை பதிவேட்டின்
கீழ் இந்திய தலைமைப் பதிவாளரால் வழங்கப்பட்ட திறன் அட்டை, இந்திய கடவுச்சீட்டு, புகைப்படத்துடன்
கூடிய ஓய்வூதிய ஆணை, மத்திய, மாநில அரசுகள், பொதுத் துறை நிறுவனங்கள், வரையறுக்கப்பட்ட
பொது நிறுவனங்களின் தொழிலாளர்களுக்கு வழங்கப்பட்ட புகைப்படத்துடன் கூடிய பணி அடையாள
அட்டை, நாடாளுமன்ற, சட்டமன்ற, சட்ட மேலவை உறுப்பினர்களுக்கு வழங்கப்பட்ட அடையாள அட்டை,
இந்திய அரசின் சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சகத்தால் வழங்கப்பட்ட இயலாமைக்கான
தனித்துவமான அடையாள அட்டை ஆகிய 12 ஆவணங்களில் ஏதாவது ஒன்றை காண்பிக்கலாம்.
இந்தியாவின் வலிமை ஜனநாயகத்தில் உள்ளது. ஆகவே, ஓட்டுப் போடுங்கள்.
