Share via:
குதிரை பேர ஆட்சி, ஷோபா மாடல் ஆட்சி என்று விஜய்க்கு தொடர்ந்து
குடைச்சல் கொடுக்கும் திமுகவுக்கு எதிராக இப்போது தவெக எம்.எல்.ஏ.க்கள் களம் இறங்கியிருக்கிறார்கள்.
குதிரை பேரம் செய்து தவெக ஆட்சியைக் கலைக்க திமுகவினர் முயற்சி என்று செந்தில்பாலாஜி
மீது ஊத்தங்கரை தவெக எம்எல்ஏ இளையராஜா குற்றம் சாட்டியிருந்தார். அவரது வழியில், திமுகவில்
இணையுமாறு திமுகவினர் தன்னிடம் பல கோடி ரூபாய் பேரம் பேசியதாக, ஸ்ரீவைகுண்டம்
தொகுதி தவெக எம்எல்ஏ சரவணன் குற்றம்சாட்டியுள்ளார்.
தூத்துக்குடி மாவட்டம், ஏரலில் பேசிய சரவணன், ‘’ஸ்ரீவைகுண்டத்தில்
நான் வெற்றி பெற்றதை தொடர்ந்து அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக திமுக, அதிமுக,
பாஜகவினர் கூட்டு சேர்ந்து சமூக வலைதளங்கள் மூலம் என் மீது பல குற்றச்சாட்டுகளை
தெரிவித்து வருகின்றனர்.
மேலும், எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்து விட்டு, திமுகவில்
சேருமாறு சிலர் என்னிடம் தொடர்ந்து கூறி வருகின்றனர். திருநெல்வேலியைச் சேர்ந்த
ஒரு தியேட்டர் உரிமையாளர் மற்றும் முன்னாள் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணனுடன் இருப்பவர்கள்
என்னிடம் பேரம் பேசினர். ‘திமுகவில் சேர்ந்தால் ரூ.50 கோடிக்கு மேல் பணம், திமுக
அரசு அமைந்தால் அமைச்சர் பதவி தருகிறோம். ராஜினாமா செய்யாவிட்டால் உங்களை என்ன
செய்வோம் என்று தெரியாது’ என மிரட்டல் விடுக்கின்றனர்.
சில நாட்களுக்கு முன்பு எனது வாகனம் விபத்துக்கு உள்ளானதிலும்
அவர்களது பங்கு இருக்குமோ என்ற சந்தேகம் எழுகிறது. ஸ்ரீவைகுண்டம் தொகுதிக்கு
உட்பட்ட பகுதிகளில் திமுக மற்றும் அதிமுகவினர் பல்வேறு ஊழல் சம்பவங்களில்
ஈடுபட்டு வருகின்றனர். இதனால், மக்கள் பணியில் ஈடுபட்டுள்ள என்னை எப்படியாவது
தடுக்க வேண்டும் என அவர்கள் கூட்டணி சேர்ந்து எனக்கு எதிராக செயல்பட்டு வருகின்றனர்.
இதற்கெல்லாம் நான் அடிபணிய மாட்டேன்’’ என்று கூறினார்.
இதற்கு திமுகவினர், ‘’50 கோடி ரூபாய்க்கு அடி போடுகிறார் சரவணன்.
இந்த பேச்சுவார்த்தை எப்போது நடந்தது, நடந்தபோதே ஏன் புகார் கொடுக்கவில்லை, திடீரென
இப்போது சொல்வதற்கு அவசியம் என்ன? சோபா கொடுத்து தவெக ஆதரவு கேட்பது ஜனநாயகம், திமுக
கேட்பது குதிரை பேரமா?’’ என்று கொந்தளிக்கிறார்கள்.
குதிரைபேர விஷயத்தை திசை திருப்புவதில் தவெகவினர் கெட்டிக்காரர்களாக
மாறிவிட்ட்டார்கள் என்பது மட்டும் உண்மை.