Share via:
விஜய் கரூருக்குச் சென்று பாதிக்கப்பட்ட மக்களை பார்க்க இருக்கும்
நிலையில், அதற்கு கடும் எதிர்ப்பு கிளம்பிவருகிறது. சாட்சியங்களை அழிக்கும் முயற்சி
என்று குற்றம் சாட்டப்படுகிறது. இந்த நிலையில் கரூர் சம்பவத்துக்கு ஸ்டாலினின் காவல்
துறையே காரணம் என்று ஆதவ் குற்றம் சாட்டியிருந்தார். இந்த விவகாரம் இன்று நீதிமன்றத்துக்கு
வருகிறது.
கரூருக்கு விஜய் செல்வதற்குள் முன்னாள் அமைச்சர் செந்தில்பாலாஜி
கைது செய்யப்பட வேண்டும் என்று காவல் துறை சுறுசுறுப்பு காட்டி வருகிறது. இந்த விவகாரத்தில்
திமுக மீது மட்டுமே தவெக மோதுகிறது.
ஆனால், நயினார் நாகேந்திரன் இப்போது விஜய் மீது கடுமையாக குற்றச்சாட்டு
வைத்திருக்கிறார். இதுகுறித்து பேசிய நயினார், ‘’தவெக எம்எல்ஏக்களை விலைக்கு வாங்க
திமுகவைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர் செந்தில்பாலாஜி உள்ளிட்டோர் குதிரை பேரத்தில்
ஈடுபட்டனர் என்பது எந்த அளவுக்கு உண்மை என தெரியவில்லை. தவெக ஆட்சிக்கு வருவதற்கு முன்பாக
எம்எல்ஏ காமராஜை கடத்திச் சென்று, அக்கட்சி பொதுச் செயலாளரின் கையொப்பம் போடப்பட்டுள்ளது.
இதற்காக தவெக அரசை என்ன செய்யலாம்?
அதிமுக எம்எல்ஏக்கள், அதிமுக முன்னாள் அமைச்சர்கள் உள்ளிட்டோர்
தவெகவுக்கு தொடர்ந்து சென்ற வண்ணம் உள்ளனர். இது குதிரை பேரமா என்பதை நாட்டு மக்கள்
பார்த்துக் கொண்டிருக்கின்றனர். தவெக ஆட்சிக்கும், திமுக ஆட்சிக்கும் எந்த வித்தியாசமும்
கிடையாது.
போதை பொருள் விற்பனை தொடர்கிறது. 150க்கும் மேற்பட்ட பாலியல் சம்பவங்களும்,
75க்கும் மேற்பட்ட படுகொலைகளும் நடந்துள்ளன. தினசரி படுகொலைகள், ஓரே நாளில் 17 பாலியல்
குற்றங்கள் தமிழகத்தில் நடைபெற்றுள்ளன. முதல்வர் என்ன செய்து கொண்டிருக்கிறார்? குதிரை
பேரம் நடத்தி ஆட்சியை நடத்த வேண்டும் என நினைக்கும் நீங்கள், மக்களுக்கு என்ன செய்ய
போகிறீர்கள்?.
கரூர் கூட்டத்துக்கு நண்பகல் 12 மணிக்கு வருவதாக தெரிவித்துவிட்டு
இரவு 7 மணிக்கு விஜய் வந்துள்ளார். அங்கு நடந்த நிகழ்வுக்கு விஜய்யும் ஒரு காரணமாக
இருப்பார். 7 மணி நேரம் காத்திருந்த மக்களுக்கு குடிப்பதற்கு கூட தண்ணீர் கொடுக்கவில்லை.
மிகப்பெரிய துயர சம்பவம் நடைபெற்றதும், இடத்தை காலி செய்துவிட்டு சென்னைக்கு ஓடிவிட்டார்.
தலைவராக இருப்பவர் மக்களை பாதுகாக்கவில்லை. பாதிக்கப்பட்ட மக்களை
மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பிவிட்டு நீதி கேட்டிருக்க வேண்டும். பின்னர்,
இறந்தவர்களின் குடும்பங்களை தன்னுடைய வீட்டுக்கு வரவைத்தது சரியா?’’ என்று கேள்வி எழுப்பியிருக்கிறார்.
திமுகவினர் மீது பாயும் தவெகவினர் ஏனோ பாஜகவினர் என்ன சொன்னாலும்
கண்டுகொள்வதே இல்லை. விஜய் மீது நேரடியாக குற்றச்சாட்டு வைத்திருக்கும் நயினாரை கைது
செய்யும் தைரியம் விஜய்க்கு இருக்கிறதா என்று திமுகவினர் கேள்வி எழுப்புகிறார்கள்.
பதில் சொல்லுங்கள் விஜய்.