Share via:
விஜய் பாணியில் தனுஷ்க்கு அரசியல் ஆசை இருப்பதாக சினிமா வட்டாரங்களில்
பேசப்பட்டு வந்தது. இதேபோன்று சூர்யா பற்றி ஒரு செய்தி உலா வந்தது. ஆனால், அதை அவர்
மறுத்துவிட்டார். தனுஷ் பற்றிய செய்தியில் உண்மை இருப்பதாக யூகிக்கும் வகையில் புதிய
கொடி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
நடிகர் தனுஷ் ரசிகர் நற்பணி மன்றத்தினர் பிறந்த நாள் விழாக்கள்,
கல்வி உதவிகள், மருத்துவ முகாம்கள், இரத்த தான முகாம்கள், இயற்கை பேரிடர் கால உதவிகள்
உள்ளிட்ட பல்வேறு பணிகளில் பங்கேற்று வருகின்றனர்.
நடிகர் தனுஷின் பிறந்த நாளை முன்னிட்டு அவரது ரசிகர்கள் ஆண்டுதோறும்
பல நலத்திட்ட உதவிகளை செய்து வருகின்றனர். ஏழை மாணவர்களுக்கு கல்வி உதவி, உணவு வழங்குதல்,
மரக்கன்றுகள் நடுதல் மற்றும் மருத்துவ உதவிகள் போன்ற நடவடிக்கைகள் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு
வருகின்றன. இந்த பணிகளுக்கு தனித்துவமான அடையாளமாக தற்போது புதிய கொடி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
புதிய கொடி சிவப்பு மற்றும் வெள்ளை நிறங்களை அடிப்படையாகக் கொண்டு
வடிவமைக்கப்பட்டுள்ளது. கொடியின் மையப்பகுதியில் நடிகர் தனுஷ் கைகளை கூப்பி வணக்கம்
தெரிவிக்கும் உருவம் கருப்பு நிறத்தில் இடம்பெற்றுள்ளது.
அவரது உருவத்தின் அருகே சிவப்பு நிற நட்சத்திரமும் இடம் பெற்றுள்ளது.
இந்த நட்சத்திரம் அவரது கலைப் பயணத்தில் கிடைத்த வெற்றிகளையும், ரசிகர்களின் அன்பையும்
பிரதிபலிப்பதாக சிலர் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
இந்த கொடியில் உள்ள, “எண்ணம் போல் வாழ்க்கை.. எண்ணம் போல்தான்
வாழ்க்கை” என்ற வாசகம் நேர்மறையான சிந்தனைகளும், நல்ல செயல்பாடுகளும் வாழ்க்கையை
உயர்த்தும் என்ற கருத்தை வலியுறுத்துகிறது.
புதிய கொடியின் வடிவமைப்பு குறித்து சமூக வலைதளங்களில் பல்வேறு
யூகங்கள் எழுந்துள்ளன. குறிப்பாக, இரட்டை நிறங்கள் மற்றும் நட்சத்திர குறியீடுகள் எதிர்கால
திட்டங்களை சுட்டிக்காட்டுகிறதா என்ற கேள்விகளும் எழுந்துள்ளன.
ஆனால், இதுகுறித்து அதிகாரப்பூர்வ விளக்கம் எதுவும் வெளியாகவில்லை.
நடிகர் தனுஷ் இதுவரை தனது சமூக வலைதள பக்கங்களில் எந்தவிதமான கருத்தையும் பதிவிடவில்லை
என்பது குறிப்பிடத்தக்கது.