Share via:
அமெரிக்காவை உலுக்கிக் கொண்டிருக்கும் எப்ஸ்டீன் ஆவணங்களில் இந்தியப்
பிரதமர் நரேந்திர மோடியின் பெயர் வெளிவந்துள்ளது. இதுகுறித்து மக்களவையில் விவாதிக்க
வேண்டும் என்று காங்கிரஸ் எம்.பி.மாணிக்கம் தாகூர் மனு தாக்கல் செய்திருக்கிறார்.
இந்நிலையில் 500 பில்லியன் டாலருக்கும் அதிகமான அமெரிக்க எரிசக்தி,
தொழில்நுட்பம், விவசாயம், நிலக்கரி மற்றும் பல பிற பொருட்களை வாங்குவதோடு, ‘அமெரிக்கப்
பொருட்களை வாங்குவோம்’ என்ற கொள்கையை மிக உயர்ந்த அளவில் கடைப்பிடிக்கவும் பிரதமர்
மோடி உறுதியளித்துள்ளார். இதையடுத்து மேட் இன் இண்டியா கொள்கை என்ன ஆனது என்று காங்கிரஸ்
கட்சி கேள்வி எழுப்பியிருக்கிறது.
எப்ஸ்டீன் கோப்பு என்பது அமெரிக்க நிதியாளரும், பாலியல் குற்றவாளியுமான
ஜெஃப்ரி எப்ஸ்டீனுடன் தொடர்புடைய நீதிமன்ற ஆவணங்களைக் குறிக்கிறது.
அமெரிக்காவின் தொடர் பாலியல் குற்றவாளி, குழந்தைகளை பாலியல் ரீதியாகத்
துன்புறுத்தியவர் மற்றும் பெண்களை பாலியல் தொழிலுக்காக கடத்துபவனான ஜெஃப்ரி எப்ஸ்டீன்,
ஜூலை 9, 2017 அன்று ஒரு மின்னஞ்சலில் பின்வருமாறு எழுதியுள்ளார்: “இந்தியப் பிரதமர்
மோடி ஆலோசனை பெற்றுக்கொண்டு, அமெரிக்க அதிபரின் நலனுக்காக இஸ்ரேலில் நடனமாடிப் பாடினார்.
அவர்கள் சில வாரங்களுக்கு முன்பு சந்தித்திருந்தனர். அது பலனளித்தது!” மோடி தன்னிடம்
ஆலோசனை பெற்றுக்கொண்டு இஸ்ரேலுக்குச் சென்றதாகவும், அங்கு அமெரிக்க அதிபரின் நலனுக்காக
நடனமாடிப் பாடியதாகவும் எப்ஸ்டீன் தெளிவாகக் கூறுகிறார். அது பலனளித்தது என்றும் அவர்
கூறியுள்ளார்.
’’இது நாட்டின் கண்ணியம் மற்றும் சர்வதேச நற்பெயர் சம்பந்தப்பட்ட
விஷயம். இதற்குப் பிரதமர் மோடி பதிலளிக்க வேண்டும். நரேந்திர மோடி ஜெஃப்ரி எப்ஸ்டீனிடம்
இருந்து என்ன மாதிரியான ஆலோசனைகளைப் பெற்றுக்கொண்டிருந்தார்? மோடி ஏன் இஸ்ரேலில் நடனமாடிப்
பாடினார்? அதனால் டிரம்பிற்கு என்ன நன்மை கிடைத்தது? எப்ஸ்டீன், “அது பலனளித்தது!”
என்று எழுதியுள்ளார். அப்படியென்றால் அதன் அர்த்தம் என்ன? பிரதமர் மோடி அவர்களே, இந்த
நாடு தெரிந்துகொள்ள விரும்புகிறது: ஜெஃப்ரி எப்ஸ்டீனுடன் உங்களுக்கு என்ன தொடர்பு’’
என்று எக்ஸ் தளத்தில் காங்கிரஸ் கட்சி கேள்வி எழுப்பியிருக்கிறது.
இதற்கு இந்திய வெளியுறவுத்துறை, ‘மோடியின் இஸ்ரேல் பயணம் மட்டுமே
உண்மை’ என்று சிறு விளக்கம் மட்டுமே கொடுத்துள்ளது. இந்நிலையில், அமெரிக்காவும் இந்தியாவும்
ஒரு பெரிய வர்த்தக ஒப்பந்தத்திற்கு ஒப்புக் கொண்டுள்ளதாக அமெரிக்க அதிபர் டொனால்ட்
ட்ரம்ப் அறிவித்துள்ளார். அதன்படி, இந்தியா மீதான பரஸ்பர வரியை 25% லிருந்து 18% ஆகக்
குறைத்துள்ளது.
உக்ரைன் – ரஷ்யா இடையிலான போரை முடிவுக்குக் கொண்டு வர அதிபர்
ட்ரம்ப் எடுத்து வரும் முயற்சிகளுக்கு ஆதரவாக ரஷ்யாவிடமிருந்து கச்சா எண்ணெய் வாங்குவதை
நிறுத்த இந்தியா ஒப்புக்கொண்டுள்ளது. இதற்கு மாற்றாக அமெரிக்கா மற்றும் வெனிசுலாவிடமிருந்து
அதிக அளவில் கச்சா எண்ணெய்யை இந்தியா இறக்குமதி செய்யும் எனவும் தெரியவருகிறது.
மேலும், அமெரிக்காவுக்கு ஏற்றுமதி செய்யப்படும் ‘மேட் இன் இந்தியா’
பொருட்களுக்கான பரஸ்பர வரியை 25 சதவீதத்திலிருந்து 18 சதவீதமாக அமெரிக்கா உடனடியாகக்
குறைத்துள்ளது. இதற்கு ஈடாக, அமெரிக்காவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு
விதிக்கப்படும் தடைகளை நீக்கி, வரியை பூஜ்ஜியமாக குறைக்க இந்தியா முன்வந்துள்ளது.
இது குறித்து அதிபர் ட்ரம்ப் தனது சமூக வலைதளப் பக்கத்தில்,
“எனது மிகச்சிறந்த நண்பர் பிரதமர் மோடியுடன் பேசியது கௌரவம். அவர் உலக அளவில் மதிக்கப்படும்
ஒரு வலிமையான தலைவர். மோடியின் வேண்டுகோளுக்கு இணங்க இந்த ஒப்பந்தம் உடனடியாக அமலுக்கு
வருகிறது. எரிசக்தி, விவசாயம் மற்றும் தொழில்நுட்பத் துறையில் 500 பில்லியன் டாலர்
மதிப்பிலான அமெரிக்கப் பொருட்களை வாங்க இந்தியா உறுதியளித்துள்ளது” எனப் பதிவிட்டுள்ளார்.
இதற்குப் பதிலளித்துள்ள பிரதமர் மோடி,“இந்தியப் பொருட்கள் மீதான
இறக்குமதி வரியை 18%-ஆகக் குறைத்த அமெரிக்க அதிபர் ட்ரம்புக்கு எனது மனமார்ந்த நன்றிகள்.
இந்தியா – அமெரிக்கா ஆகிய இரு பெரும் ஜனநாயக நாடுகளின் இந்த இணக்கம், இருநாடுகளின்
வளர்ச்சிக்கு வித்திடும். உலக அமைதி, ஸ்திரத்தன்மை மற்றும் செழிப்புக்கு அதிபர் ட்ரம்ப்பின்
தலைமைத்துவம் மிகவும் அவசியம் .”எனத் தெரிவித்துள்ளார்.
ஜெஃப்ரி எப்ஸ்டீன் ஆவணங்களுக்கும் அமெரிக்க ஒப்பந்தத்திற்கும்
முடிச்சுப் போட்டுப் பார்க்கிறார்கள். அமெரிக்கா இந்தியாவுக்கு 18% வரி விதிக்கும்போது
இந்தியா பூஜ்ஜியம் வரி விதிப்பது என்ன நியாயம்..? இப்படி டோட்டல் சரண்டர் ஆவதுதான்
மோடியின் வீரமா..?
