Share via:
தமிழகத்தில் முன்கூட்டியே வடகிழக்கு பருவமழை தொடங்கியது. இதன் காரணமாக சென்னை உள்ளிட்ட பல மாவட்டங்களில் கடந்த 2 நாட்களாக கனமழை கொட்டித் தீர்த்த நிலையில், தேங்கிய மழைநீரை துரிதமாக தூய்மைப் பணியாளர்கள் அகற்றினார்கள். அதன்படி சென்னையில் நேற்று முன்தினம் யானைக்கவுனி, புளியந்தோப்பு உள்ளிட்ட வடசென்னை பகுதிகளில் நடைபெற்று வரும் மழைநீர் அகற்றும் பணிகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பார்வையிட்டார். மேலும் வெற்றிகரமாக ஆங்காங்கே தேங்கியிருந்த மழைநீர் அகற்றப்பட்டு மக்கள் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பினர்.
இந்நிலையில் சென்னை கொளத்தூர் ஜம்புலிங்கம் மெயின் ரோட்டில் அமைந்துள்ள திருமண மண்டபத்தில் தூய்மைப் பணியாளர்களுக்கு நன்றி தெரிவித்ததுடன் அவர்களுடன் முதல்வர் மு.க.ஸ்டாலின் ஒன்றாக அமர்ந்து சுடச்சுட பிரியாணி சாப்பிட்டார். மேலும் தூய்மைப் பணியாளர்களுக்கு நலத்திட்ட உதவிகளையும் வழங்கினார்.
முதல்வர் மு.க.ஸ்டாலின், சென்னை மேயர் பிரியா, அமைச்சர்கள் உள்ளிட்டோர் தூய்மைப் பணியாளர்களுக்கு பிரியாணியை பரிமாறி இன்முகத்துடன் சாப்பிட வைத்தனர். மேலும் எப்பேர்ப்பட்ட மழை வந்தாலும் அதை சமாளிக்க தமிழக அரசு தயாராக உள்ளது என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.