Share via:
பா.ஜ.க.வில் இருந்து விலகிய நடிகை விஜயசாந்தி, காங்கிரசில் இணைந்த நிலையில் அவருக்கு முக்கிய பொறுப்பு கொடுக்கப்பட்டுள்ளது.
முன்னாள் மேடக் எம்.பி.யும், அதிரடி நடிகையுமான விஜயசாந்தி பா.ஜ.க.வில் இணைந்து செயல்பட்டு வந்தார். தேர்தலில் சீட் கேட்டு கிடைக்காததால் அதிருப்தியடைந்த விஜயசாந்தி, பா.ஜ.க.வில் இருந்து விலகுகிறார் என்ற செய்தி தீயாக பரவியது.
இதை ஊர்ஜிதம் செய்யும் வகையில் பா.ஜ.க.வின் எந்த நிகழ்ச்சியிலும் கலந்து கொள்ளாமல் இருந்து வந்த விஜயசாந்தி, காங்கிரசில் இணைய உள்ளார் என்ற செய்தியும் கடந்த சில நாட்களாக தீயாக பரவி வந்தது.
இதற்கிடையில் நடிகை விஜயசாந்தி, பா.ஜ.க.வில் இருந்து விலகி, காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே முன்னிலையில் காங்கிரஸ் கட்சியில் தன்னை இணைத்துக் கொண்டார். இதைத்தொடர்ந்து விஜயசாந்திக்கு தெலுங்கானா மாநில பரப்புரைக்குழு தலைமை ஒருங்கிணைப்பாளராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
விஜயசாந்தி பா.ஜ.க.வில் இருந்து விலகுவது இது ஒன்றும் முதல்முறை கிடையாது. கடந்த 1997ம் ஆண்டு பா.ஜ.க.வில் இணைந்த விஜயசாந்தி, 2005ம் ஆண்டு தனிக்கட்சி தொடங்கியதால் விலகினார். அதன் பின்னர் சந்திரசேகரராவின் டி.ஆர்.எஸ். கட்சியில் தன்னை இணைத்துக் கொண்டார். அதன் ஆதரவில் 2009ம் ஆண்டு தேர்தலில் வெற்றி பெற்று விஜயசாந்தி எம்.பி.யான நி லையில் 2014ம் ஆண்டு திடீரென்று காங்கிரஸ் கட்சியில் இணைந்தார்.
பின்னர் 6 வருடங்கள் கழித்து காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகிய விஜயசாந்தி மீண்டும் பா.ஜ.க.வில் இணைந்தார். எப்படியும் தெலுங்கானா தேர்தலில் போட்டியிட தனக்கு வாய்ப்பு கிடைத்துவிடும் என்று நம்பிக்கை வைத்திருந்த விஜயசாந்தி ஏமாற்றமடைந்ததால் பா.ஜ.க.வில் இருந்து மீண்டும் விலகியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.