Share via:
மதுரை ரெயில்வே மைதானத்தை தனியாருக்கு விற்பனை செய்வதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ள தமிழறிஞர் சாலமன் பாப்பையா, நாட்டையே விற்றுவிடுவார்களோ என்று கூறி தனது கண்டனத்தை தெரிவித்துள்ளார்.
மதுரை ரெயில்வே மைதானம் மற்றும் ரெயில்வே காலனியில் உள்ள 40.26 ஏக்கர் நிலத்தை தனியாருக்கு தாரை வார்க்கும் முயற்சியில் ரெயில்வே நிர்வாகம் ஈடுபட்டுள்ளதாக எழுந்துள்ள பல்வேறு குற்றச்சாட்டுகள் தமிழகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதற்கு கண்டனம் தெரிவித்து மதுரை மக்களை உறுப்பினர் சு.வெங்கடேசன் கடந்த வாரம் கையெழுத்து இயக்கம் ஒன்றை ஆரம்பித்து பல்வேறு பிரமுகர்கள் மற்றும் பொதுமக்களிடம் கையெழுத்துகளை வாங்கி தங்களது கண்டனத்தை பதிவிட்டு வருகின்றனர்.
இந்நிலையில் தமிழ்பேராசிரியரும், தமிழறிஞரும், பட்டிமன்ற பேச்சாளருமான சாலமன் பாப்பையா, கையெழுத்து இயக்கத்தில் கையெழுத்திட்டு பேசியுள்ளார். இந்த வீடியோவை எம்.பி.வெங்கடேசன் எக்ஸ் பக்கத்தில் வெளியிட்ட நிலையில் அது வைரலாகி வருகிறது.
சாலமன் பாப்பையா பேசும்போது, ‘‘மதுரை ரெயில்வே மைதானத்தில் சில நேரங்களில் எங்கள் பிள்ளைகள் சென்று விளையாடுவார்கள். முதியவர்கள் பலரும் காலை வேளையில் நடைபயிற்சி மேற்கொள்வார்கள். இது மக்களுடைய சொத்தாக இருக்கிறது. இந்த சொத்தை தனியாருக்கு விற்பனை செய்வது என்பது, போகிற போக்கில் நாட்டையே தனியாருக்கு விற்றுவிடலாம் போல இருக்கிறது. மிகப்பெரிய மாற்று வேலைகள் எல்லாம் நடந்து கொண்டிருக்கிறது. இது கூடாது. என்றைக்கும் போலவே மக்கள் அங்கு சென்று ஓடவும், விளையாடவும், நடக்கவும் மைதானம் இருக்க வேண்டும் என்று வேண்டி கேட்டுக் கொள்வதாக பேசியுள்ளார்.