Share via:
ஐதராபாத்தில் அடிக்குமாடி குடியிருப்பில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் 9 பேர் பலியான சம்பவம் சோகத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.
தெலங்கானா மாநிலம் ஐதராபாத்தில் நம்பள்ளி நகரில் அடுக்குமாடி குடியிருப்பு ஒன்று அமைந்துள்ளது.இந்த குடியிருப்பின் தரைத்தளத்தில் ரசாயன பொருட்கள் விற்பனை செய்யும் நிறுவனகிடங்கு ஒன்று செயல்பட்டு வந்தது. அதன் அருகே மெக்கானிக் சென்டரும் செயல்பட்டு வந்துள்ளது.
மெக்கானிக் ஷெட்டில் வெல்டிங் செய்து கொண்டிருந்த போது திடீரென்று தீ விபத்து ஏற்பட்டு அது அருகில் இருந்த ரசாயன கிடங்கிற்கும் பரவியதாக முதல்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. இந்த பயங்கர தீ விபத்தில் 9 பேர் உயிரிழந்துள்ள நிலையில் 10க்கம் மேற்பட்டோர் படுகாயங்களுடன் மீட்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
தகவல் அறிந்து விரைந்து சென்ற தீயணைப்புத் துறையினர் பல மணி நேரம் போராடி தீயை கட்டுக்குள் கொண்டு வந்து பாதிக்கப்பட்டவர்களை மீட்டனர். இருப்பினும் புகை மூட்டம் அதிகமாக உள்ளதால் பலரை மீட்க முடியாத சூழ்நிலை உருவாகியுள்ளது. இதனால் பலி எண்ணிக்கையும், காயமடைந்தோர் எண்ணிக்கையும் அதிகரிக்கலாம் என்ற அச்சமும் நிலவுகிறது. தீ விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.