Share via:
எதிர்க்கட்சித் துணைத் தலைவர் விவகாரம் தொடர்பாக சபாநாயகர் அப்பாவுவுக்கு சென்னை உயர்நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சட்டமன்ற எதிர்க்கட்சித் துணைத்தலைவராக ஆர்.பி.உதயகுமாரை அங்கீகரிக்கும்படி அ.தி.மு.க. பொதுச் செயலாளரும், எதிர்க்கட்சித் தலைவர் என்ற வகையிலும், சபாநாயகர் அப்பாவுவிடம் பல முறை மனு கொடுத்திருந்தார். அ.தி.மு.க.வில் இணைந்து செயல்பட்டுக் கொண்டிருந்த எடப்பாடி பழனிசாமி மற்றும் ஓ.பன்னீர்செல்வதுக்கு இடையில் ஏற்பட்ட கருத்துவேறுபாடு மற்றும் ஒற்றுமையின்மையை தொடர்ந்து ஓ.பன்னீர்செல்வம் அ.தி.மு.க.வில் இருந்து விலக்கப்படுவதாக எடப்பாடி பழனிசாமி அறிவித்தார். அதைத்தொடர்ந்து அ.தி.மு.க.வின் பொதுச் செயலாளராகவும் எடப்பாடி பழனிசாமி செயல்பட்டு வருகிறார்.
இதைத்தொடர்ந்து எழுந்த சட்டமன்ற எதிர்க்கட்சித் துணைத்தலைவர் இருக்கை விவகாரம் குறித்து எந்த பதிலும் இல்லாததால் வேறு வழியின்றி சென்னை உயர்நீதிமன்றத்தை நாடிய எடப்பாடி பழனிசாமி, ஆர்.பி.உதயகுமாரை எதிர்க்கட்சித் துணைத் தலைவர் பதவிக்கு அங்கீகரிக்கும் சபாநாயகருக்கு உத்தரவிடும்படி மனுதாக்கல் செய்திருந்தார்.
அந்த வகையில் இந்த மனு குறித்த விசாரணை இன்று உயர்நீதிமன்ற நீதிபதி அனிதா சுமந்த் முன்பு எடுத்துக் கொள்ளப்பட்டது. அப்போது எடப்பாடி பழனிசாமி தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞரான விஜய் நாராயணன் வாதங்களை முன்வைத்தார். அவர் கூறும்போது, ‘‘சட்டமன்ற எதிர்க்கட்சித் துணைத் தலைவராக ஆர்.பி.உதயகுமாரையும், துணைச் செயலாளராக அக்ரி கிருஷ்ணமூர்த்தியையும் தேர்ந்தெடுத்துள்ள நிலையில், அவர்களை உரிய இருக்கையில் அமரவைக்க 20 முறை நினைவூட்டல் கடிதங்கள் அனுப்பியும், சபாநாயகர் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று வாதத்தை முன்வைத்தார்.
அதைத்தொடர்ந்து வருகிற டிசம்பர் மாதம் 12ம் தேதிக்கு இந்த மனுவுக்கு பதில் அளிக்கும்படி, சட்டமன்ற செயலாளர், சபாநாயகருக்கு நீதிபதி உத்தரவிட்டு, வழக்கின் விசாரணையை அன்றைய தினத்திற்கு ஒத்திவைத்து உத்தரவிட்டார்.