Share via:
முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு ப்ளூ காய்ச்சல் ஏற்பட்டுள்ளதால் அவர் தற்போது மருத்துவர்களின் அறிவுறுத்தலின்படி ஓய்வில் உள்ளார் என்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
சென்னை தேனாம்பேட்டை பொது சுகாதாரத்துறை இயக்குனரகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி மகப்பேறு நிதி உதவி திட்டம் உள்ளிட்ட திட்டங்களை புதுப்பித்து தொடங்கும் நிகழ்வு நடைபெற்றது.
இதில் கலந்து கொண்ட மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், பயனாளிகளுக்கு உதவித் தொகை மற்றும் குழந்தை நல பரிசு பெட்டகத்தை வழங்கினார். அதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ‘‘டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி மகப்பேறு நிதி உதவித் திட்டத்தின் கீழ் 18 ஆயிரம் ரூபாய் உதவித்தொகை ஐந்து தவணையாக வழங்கப்பட்டு வந்த நிலையில் அதன் சிரமங்கள் களையப்பட்டு தற்போது மீண்டும் புதுப்பிக்கப்பட்டுள்ளது என்று தெரிவித்தார்.
மேலும் மத்திய அரசின் பங்கீடான 3 ஆயிரம் ரூபாய் விடுவிப்பதில் தாமதமானதால் தமிழ்நாடு அரசின் பங்களிப்பான 15 ஆயிரத்தை விடுவிப்பதில் தாமதம் ஏற்பட்டது என்று தெரிவித்தார். உதவித் தொகை கிடைப்பதில் ஏதேனும் சிக்கல் இருந்தால் பயனாளர்கள் 104 என்ற எண்ணிலோ அல்லது துணை சுகாதார அலுவலகத்திலோ முறையிடலாம் என்று கேட்டுக் கொண்டார்.
தொடர்ந்து பேசிய அமைச்சர் மா.சுப்பிரமணியன், ‘‘கடந்த சில நாட்களுக்கு முன்பு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு உடல்நிலை சரியில்லாமல் போன நிலையில், அவர் மருத்துவ ஓய்வில் இருந்து வருகிறார் என்று தெரிவித்தார். மேலும் மருத்துவர்கள் அடங்கிய குழுவினர் முதலமைச்சரை பரிசோதனை செய்ததில், அவருக்கு ப்ளூ வகையான பாதிப்பை கண்டறிந்ததால் ஓய்வில் இருந்து வருகிறார். இன்னும் ஓரிரு நாட்களில் முழுமையாக குணமடைந்துவிடுவார் என்றும் அமைச்சர் தெரிவித்தார்.