Share via:
சென்னை உயர்நீதிமன்ற 5 கூடுதல் நீதிபதிகளை நிரந்தர நீதிபதிகளாக நியமித்து குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளார்.
சென்னை உயர்நீதிமன்றத்தில் நீதிபதிகளில் காலிப் பணியிடங்களை பூர்த்தி செய்யும் நடவடிக்கையில் உச்சநீதிமன்ற கொலீஜியம் இறங்கியுள்ளது. அதன்படி சென்னை உயர்நீதிமன்றத்தில் இருக்கும் 5 கூடுதல் நீதிபதிகளை நிரந்தர நீதிபதிகளாக மாற்ற உச்சநீதிமன்ற கொலீஜியம் முடிவு செய்துள்ளது.
இது குறித்து உச்சநீதிமன்ற கொலீஜியம் இணையத்தில் தீர்மானம் ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில், கூடுதல் நீதிபதிகளை நிரந்தர நீதிபதிகளாக மாற்றக் கோரிய தீர்மானத்தை தமிழ்நாடு முதலமைச்சரும், தமிழக ஆளுநரும் அவர்களது ஒப்புதல்களை தெரிவித்தனர்.
அதன்படி உச்சநீதிமன்றத்தின் தலைமை நீதிபதியும், கொலீஜியத்தின் தலைவருமான டி.ஒய்.சந்திரசூட் மற்றும் நீதிபதிகள் அடங்கிய அமர்வில், சென்னை உயர்நீதிமன்றத்தில் கூடுதல் நீதிபதிகளாக இருந்து வரும் நக்கீரன், நிடுமோலுமாலா, எஸ்.சவுந்தர், சுந்தர் மோகன் மற்றும் கபாலி குமரேஷ்பாபு ஆகியோரை நிரந்தர நீதிபதிகளாக மாற்ற பரிந்துரை செய்யப்பட்டனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த பரிந்துரையை ஏற்றுக் கொண்ட குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு 5 பேரையும் நிரந்தர நீதிபதிகளாக நியமித்து ஒப்புதல் வழங்கி உத்தரவிட்டுள்ளார்.