Share via:
காஞ்சிபுரம் மாவட்டம், பரந்தூர் மற்றும் அதன் சுற்றுவட்டார
கிராமங்களை உள்ளடக்கி புதிய பசுமை வழி விமான நிலையம் அமைக்கும் திட்டத்தைக் கைவிடுவதாக
சட்டப்பேரவையில் நேற்று 110 விதியின் கீழ் முதல்வர் விஜய் அறிவித்தார். இந்த
அறிவிப்புக்கு ஏகனாபுரம் கிராம மக்கள், போராட்டக் குழுவினர் பட்டாசு வெடித்து இனிப்புகளை
வழங்கி உற்சாகமாகக் கொண்டாடினர்.
மேலும் ஏகனாபுரம் பிரதான சாலைக்கு முதல்வரின் பெயரைச் சூட்ட
கிராம சபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. அதோடு இன்று முதல்வர் விஜய்யை
நேரில் சந்தித்து அரசிடம் நன்றி தெரிவிக்க இருக்கிறார்கள்.
அதேநேரம் விமான நிலைய திட்டம் ரத்துக்கு பல்வேறு கட்சிகள் கடும்
எதிர்ப்பு தெரிவித்துள்ளன. உதயநிதி ஸ்டாலின், ‘’பெருகி வரும் விமானப் பயணிகளின் எண்ணிக்கை
மற்றும் விமான சரக்கு போக்குவரத்து, எதிர்காலத் தேவை போன்றவற்றின் அடிப்படையில்,
சென்னைக்கு 2-வது விமான நிலையம் அவசியம் என்பதை உணர்ந்து, பரந்தூர் விமான நிலையத்
திட்டம் திமுக அரசால் உருவாக்கப்பட்டது. அற்ப அரசியல் காரணங்களுக்காக திட்டத்தையே
கைவிடுகிறேன் என்று சொன்னால், அது அரசுக்கு பெரும் நிதி இழப்பை ஏற்படுத்தும்’’
என்று எச்சரிக்கை செய்திருக்கிறார்.
பாஜகவின் மாநில தலைவர் நயினார் நாகேந்திரன், ‘’தவெக அரசுக்கு பரந்தூரில்
விமான நிலையம் அமைவது பிரச்சினையா அல்லது தமிழகத்துக்கு ஓர் புதிய விமான நிலையம்
கிடைப்பதில் பிரச்சினையா?’’ என்று கேட்டுள்ளார்.
பரந்தூருக்கு கையகப்படுத்தப்பட்ட நிலம் என்னாகும் என்பது கேள்விக்குறியாகியுள்ளது.
இதுகுறித்து தங்கம் தென்னரசு, ‘’கிட்டத்தட்ட 90% நிலங்களை கையகப்படுத்திவிட்டோம். ஒரு
கிராமத்தைத் தவிர மற்றவர்கள் இழப்பீட்டுத் தொகியை வாங்கிவிட்டனர். நிலம் கையலகப்படுத்தல்
சட்டப்படி, எந்த நோக்கத்திற்காக நிலம் பெறப்பட்டதோ, அதற்கு மட்டுமே பயன்படுத்த வேண்டும்.
நிலம் கொடுத்த மக்களுக்கு என்ன பதில் சொல்லப்போகிறீர்கள், வேறு திட்டம் அங்கு வரும்
என்றால் விவசாயம் பாதிக்கப்படாதா?’’ என்று கேள்வி எழுப்பியிருக்கிறார்.
இந்த நிலையில், விமான நிலையத்தை இணைக்கும் வகையில் திட்டமிடப்பட்ட
பூந்தமல்லி – பரந்தூர் மெட்ரோ ரயில் நீட்டிப்புத் திட்டம், சென்னை பெங்களூரு விரைவுச்
சாலையுடன் பரந்தூரை இணைக்கும் அணுகு சாலைகள் மற்றும் தென் மாவட்டங்களை எளிதில்
சென்றடையும் நோக்கில் நடைபெற்று வரும் காஞ்சிபுரம் – கூட்டேரிப்பட்டு 4 வழிச்
சாலைப் பணிகள் ஆகியவை இனி வருமா என்பது கேள்விக்குறியாக மாறியுள்ளது.
