Share via:
ஒரே ஒரு எம்.எல்.ஏ. ஜெயித்து, அந்த எம்.எல்.ஏ.வையும் தவெகவுக்கு
தாரை வார்த்துவிட்ட டிடிவி தினகரன் நேற்றைய தினம் கவர்னரை சந்தித்த விவகாரம் அரசியலில்
ஹாட் டாபிக் ஆக மாறியிருக்கிறது.
இது குறித்து டிடிவி தினகரன் வெளியிட்ட பதவில், ‘’மேதகு தமிழக
ஆளுநர் திரு. ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் அவர்களை நேரில் சந்தித்து, தவெக அரசு மீதான
குதிரை பேரம் தொடர்பான குற்றச்சாட்டுகள், மன்னார்குடி சட்டமன்ற உறுப்பினர் மீது பத்தாவது
அட்டவணையின் கீழ் தாக்கல் செய்யப்பட்ட தகுதி நீக்க மனுவின் மீது மாண்புமிகு தமிழக சட்டப்பேரவைத்
தலைவர் அவர்கள் உரிய நடவடிக்கை எடுக்கத் தவறியமை மற்றும் கடந்த 08.05.2026 அன்று குதிரை
பேரம் தொடர்பாக சென்னை கிண்டி காவல் நிலையத்தில் அளித்த புகார் தொடர்பாக முதல் தகவல்
அறிக்கை பதிவு செய்து விசாரணை மேற்கொள்ளத் தவறியமை ஆகியவற்றில், மேதகு ஆளுநர் அவர்கள்
நேரடியாகத் தலையிட்டு உரிய நடவடிக்கை எடுக்கக் கோரி மனு அளிக்கப்பட்டது.’’ என்று கூறியிருக்கிறார்.
அது மட்டுமின்றி இன்று அவரது அறிக்கையில், ‘’அரிசி, பருப்பு, சர்க்கரை
உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களின் விலை உயர்வு – தவெக அரசின் நிர்வாகத் திறமையின்மையையும்
கையாலாகாத்தனத்தையுமே வெளிப்படுத்தியுள்ளது! தமிழகத்தில் தவெக ஆட்சிக்கு வந்த நாள்
முதல் அரிசி, சர்க்கரை, பருப்பு உள்ளிட்ட அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலை கிடுகிடுவென
உயர்ந்து கொண்டே செல்வது ஏழை, எளிய மற்றும் விளிம்புநிலை மக்களிடையே பெரும் கவலையை
ஏற்படுத்தியுள்ளது.
ஆட்சிப் பொறுப்பேற்று நூறு நாட்களைக் கடந்தும் விவசாயக் கடன் தள்ளுபடி,
குடும்பத் தலைவிக்கு மாதம் ரூ.2,500 உள்ளிட்ட தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றாமல்,
அனைத்து தரப்பு மக்களையும் வஞ்சித்துள்ள நிலையில், மின்கட்டண உயர்வு, சென்னை மாநகராட்சி
சொத்துவரி உயர்வு உள்ளிட்ட தொடர் கட்டண மற்றும் வரி உயர்வுகளால் ஏழை, எளிய மற்றும்
நடுத்தர மக்களின் குடும்பச் செலவுகள் ஏற்கனவே அதிகரித்துள்ளன. இந்நிலையில், மக்களின்
அன்றாட வாழ்க்கையுடன் நேரடியாகத் தொடர்புடைய அத்தியாவசியப் பொருட்களின் விலை உயர்வைக்கூடக்
கட்டுப்படுத்த முடியாதது தவெக அரசின் நிர்வாகத் திறமையின்மையையும் கையாலாகாத்தனத்தையுமே
வெளிப்படுத்துகிறது.
மேலும், அடுத்தடுத்த பண்டிகைகள் நெருங்கி வரும் சூழலில், அத்தியாவசியப்
பொருட்களின் விலை, குறிப்பாக சர்க்கரையின் விலை 50 % வரையிலும், அரிசியின் விலை 40
% வரையிலும், எண்ணெயின் விலை 60 வ% வரையிலும் உயர்ந்திருப்பதால், ஏழை, எளிய மற்றும்
நடுத்தர மக்களின் அன்றாடச் செலவுகள் அதிகரித்துள்ளதோடு, அவர்களின் பண்டிகைக் காலக்
கொண்டாட்டங்களையும் கேள்விக்குறியாக்கியுள்ளது. எனவே, அத்தியாவசியப் பொருட்களின் விலை
உயர்வைக் கட்டுக்குள் கொண்டு வருவதற்குத் தேவையான ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகளை உடனடியாக
மேற்கொள்வதோடு, விலை குறையும் வரை நியாயவிலைக் கடைகளில் வழங்கப்படும் அரிசி, பருப்பு,
சர்க்கரை, எண்ணெய் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களின் அளவை தேவைக்கேற்ப உயர்த்தி வழங்குவதற்கான
நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்’’ என்று கேட்டுள்ளார்.
பாஜகவின் நெருக்கமான வட்டத்தில் இருக்கும் டிடிவி நடவடிக்கை தவெகவினருக்கு
கொஞ்சம் பதட்டத்தை உருவாக்கியிருக்கிறது. என்னமோ நடக்குது.
