Share via:
கோடநாடு கொலை, கொள்ளை வழக்கு தொடர்பாக அ.தி.மு.க. பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமியை தொடர்புப்படுத்தி பேச அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு சென்னை உயர்நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்துள்ளது.
இந்தியா முழுவதும் பேச்சுப்பொருளாக மாறிய சனாதன ஒழிப்பு குறித்து அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசியதற்கு பல்வேறு எதிர்ப்பு தெரிவித்தனர்.
இதற்கு விமர்சனம் தெரிவித்த அ.தி.மு.க. பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி, ‘‘மக்கள் பிரச்சினையை திருப்பவே சனாதனம் குறித்து உதயநிதி பேசியுள்ளார்’’ என்று தெரிவித்தார்.
இதற்கு பதிலடியாக கடந்த 7ம் தேதி (செப்.) அமைச்சர் உதயநிதி பேசும்போது, ‘‘கோடநாடு கொலை, கொள்ளை வழக்குகளிலும், ஊழல் வழக்குகளிலும் இருந்து தப்பிக்கவே எடப்பாடி பழனிசாமி இதுபோன்று விமர்சனம் செய்துள்ளதாக தெரிவித்தார்.
இதைத்தொடர்ந்து உதயநிதி ஸ்டாலினின் இந்த கருத்துக்கு எதிராக ரூ.1.10 கோடி நஷ்ட ஈடு கேட்டு சென்னை உயர்நீதிமன்றத்தில் எடப்பாடி பழனிசாமி மனுதாக்கல் செய்தார். இந்த வழக்கு நீதிபதி மஞ்சுளா முன்பு விசாரணைக்கு வந்தது.
அப்போது கோடநாடு, கொலை கொள்ளை தொடர்பாக ஒரு முறை கூட சம்மன் பெறப்படாத நிலையில், தன் நற்பெயருக்கு களங்கம் விளைவிக்கும் வகையில் பொய்யான குற்றச்சாட்டுகளை எக்ஸ் பக்கத்தில் பதிவிட்ட நிலையில் அதனை 6 லட்சத்துக்கும் மேற்பட்ட மக்கள் பார்த்துள்ளாக எடப்பாடி பழனிசாமி தரப்பில் வாதம் முன் வைக்கப்பட்டது.
இந்த வாதங்களை கேட்ட நீதிபதி, ‘‘உதயநிதி அறிக்கை அவதூறாக உள்ளதாகவும், இதை அனுமதித்தால் மனுதாரருக்கு ஈடுகட்ட முடியாத இழப்பு ஏற்படும் என்பதால், மேற்கொண்டு இதுபோல அறிக்கைகள் வெளியிடக் கூடாது என அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு தடை விதித்து நீதிபதி உத்தரவிட்டார்.