Share via:
ஆட்சி அதிகாரத்தில் பங்கு அவசியம் என்ற கிரிஷ் சோடங்கரின் கருத்து
தமிழ்நாடு காங்கிரஸின் கருத்து தான் என்று தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை
தெரிவித்துள்ள விவகாரம் திமுகவினரை கோபமூட்டியுள்ளது.
கடந்த 2021 தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலில் திமுக கூட்டணியில் காங்கிரஸ்
கட்சி 25 இடங்களில் போட்டியிட்டு 18 தொகுதிகளில் வெற்றி பெற்றது. தோற்றூப்போன 7 தொகுதிகளிலும்
காங்கிரசை அதிமுக வெற்றி வென்றது. ஆகவே, இந்த முறை காங்கிரஸ் கட்சிக்கு 20 சீட் கொடுத்தால்
போதும் என்று திமுக நினைக்கிறது.
இந்த நிலையில்தான் விஜய்யை காங்கிரஸ் கட்சியின் பிரவீன் சக்கரவர்த்தி
நேரில் சந்தித்துப் பேசினார். இப்போது கிரிஷ் சோடங்கர் கூட்டணி ஆட்சி வேண்டும் என்று
கோஷம் வைத்திருக்கிறார்.
இதுகுறித்து பேசும் காங்கிரஸார், ‘’விஜய்யுடன் காங்கிரஸ் கூட்டணி
அமைத்தால், அதிகாரத்திலும் பங்கு கிடைக்கும் என்பதால் ஓபிஎஸ், டிடிவி தினகரன், புதிய
தமிழகம் கிருஷ்ணசாமி ஆகியோர் கூட்டணிக்கு வருவார்கள்.
திமுகவில் கூடுதல் தொகுதிகள் கொடுக்கவில்லை என்றால் விடுதலை சிறுத்தைகள்,
கம்யூனிஸ்ட் கட்சிகள் வரவும் வாய்ப்பு உண்டு. காங்கிரஸ் கட்சிக்கு 50 தொகுதிகள் கிடைக்க
வாய்ப்பு உண்டு. விஜய்க்கு வரும் கூட்டத்தை வைத்துப் பார்த்தால் கூட்டணி எப்படியும்
160 இடங்களில் ஜெயித்து ஆட்சியைப் பிடிக்க முடியும். காங்கிரஸ் கட்சிக்கும் அதிகாரம்
கிடைக்கும். அடுத்த நாடாளுமன்றத் தேர்தலிலும் இது எதிரொலிக்கும்’’ என்று குஷியாகிறார்கள்.
ஆனால் காங்கிரஸ் கட்சியின் மூத்த புள்ளிகள், ‘’திமுக அணியில் இருந்தால்
கௌரவமாக சில சட்டமன்ற உறுப்பினர்களை வென்று சட்டசபைக்கு செல்லும் வாய்ப்பு காங்கிரசுக்கு
கிடைக்கும் மாறாக அதிமுகவுடனோ, தவெக உடனோ கூட்டணி அமைப்பதோ அல்லது தனியே நிற்பதோ அல்லது
காங்கிரஸ் தலைமையில் புதிதாக ஒரு கூட்டணி அமைப்பதோ காங்கிரஸ் கட்சிக்கு எந்த பலனையும்
கொடுக்காது.
இதையெல்லாம் தாண்டி காங்கிரஸ் கட்சி புதிய கூட்டணிக்கு முடிவு
எடுத்தால், ப.சிதம்பரம், பீட்டர் அல்போன்ஸ், தங்கபாலு போன்ற தலைவர்களை வைத்து தமிழக
காங்கிரஸை திமுக உடைத்துவிடும். எனவே காங்கிரஸ் கட்சி இப்படி பேசுவது எல்லாம் பழைய
அளவுக்காவது தொகுதிகளைப் பெறுவதற்கு மட்டுமே’’ என்கிறார்கள். பார்க்கலாம்.