Share via:
எதிரிகளே இல்லாமல் ஈரோடு இடைத்தேர்தல் களத்தில் நிற்கும் தி.மு.க.வினர்,
நாம் தமிழர் வேட்பாளரையும் சரிக்கட்டி களத்தில் இருந்து நீக்கிவிட்டு போட்டியின்றி
தேர்வு செய்யப்படுவதற்குத் திட்டமிடுவதாகத் தெரியவந்துள்ளது. இதையடுத்து சீமான் கட்சியினர்
வேட்பாளர் பாதுகாப்பில் இப்போதே கவனம் செலுத்தத் தொடங்கியுள்ளனர்.
ஈரோடு கிழக்கு
சட்டப்பேரவை தொகுதி மூன்றாவது முறை தேர்தலை சந்திக்கிறது. இந்த தொகுதியில் எம்.எல்.ஏ
ஈவிகேஎஸ் இளங்கோவன் மறைவால் ஏற்பட்ட காலியிடத்தை நிரப்ப வரும் பிப்ரவரி 5ஆம் தேதி இடைத்தேர்தல்
அறிவிக்கப்பட்டுள்ளது. அதிமுக, பாஜக, தேமுதிக உள்ளிட்ட கட்சிகள் இடைத்தேர்தலை புறக்கணிப்பதாக
அறிவித்துள்ள நிலையில், திமுக சார்பில் சந்திரகுமார் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார்.
இந்நிலையில், ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில், நாம் தமிழர் கட்சி
சார்பில், மா.கி.சீதாலட்சுமி போட்டியிடுவதாக, அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர்
சீமான் அறிவித்துள்ளார். புதிய வேட்பாளரை அறிவித்தால் தி.மு.க.வினர் வளைத்துவிடுவார்கள்
என்பதாலே மிகவும் நம்பிக்கையான ஒருவரை வேட்பாளராக நிறுத்தியுள்ளனர். கடந்த 2019-ம்
ஆண்டு மக்களவைத் தேர்தலில் ஈரோடு தொகுதியிலும், 2024-ம் ஆண்டு மக்களைவைத் தேர்தலில்
திருப்பூர் தொகுதியிலும் நாம் தமிழர் கட்சி சார்பில் சீதாலட்சுமி போட்டியிட்டுள்ளார்.
ஈரோடு மாவட்டம் ஓடத்துறை ஊராட்சிக்கு உட்பட்ட மாரப்பம்பாளையத்தை
சேர்ந்தவர். வயது 49. தந்தை ம.கிருஷ்ணன், தாய் காந்திமதி. இவரது கணவர் இரா.செழியன்.
சீதாலட்சுமி எம்.ஏ, எம்.ஃபில் படித்தவர். கோபி கலைக் கல்லூரியில் இளங்கலை பொருளாதாரம்
படித்தவர். கோவை பாரதியார் பல்கலைக்கழகத்தில் முதுகலை ஆய்வியல் முடித்தவர். கடந்த
2000 முதல் 2013 வரை 13 ஆண்டுகாலம் ஆசிரியராக பணியாற்றியவர். விவசாயம், கேபிள் டிவி
ஆபரேட்டர் ஆகிய பணிகளை தற்போது மேற்கொண்டு வருகிறார். அரசியல் ஆர்வம் காரணமாக சீமானின்
நாம் தமிழர் கட்சியில் இணைந்து செயல்பட்டு கொண்டிருக்கிறார்.
ஈரோடு கிழக்கு தொகுதியில் கடந்த 2021 சட்டப்பேரவை தேர்தலில் நாம்
தமிழர் கட்சி 7.65 சதவீதமும், 2023 இடைத்தேர்தலில் 6.35 சதவீதமும் வாக்குகளை பெற்றது.
சமீபத்தில் தான் மாநிலக் கட்சி என்ற அங்கீகாரத்தை இந்திய தேர்தல் ஆணையம் மூலம் நாம்
தமிழர் கட்சி பெற்றுள்ளது. இந்நிலையில் முதன்முதலாக டெபாசிட்டை தக்க வைக்குமா அல்லது
வேட்பாளரை இழந்துவிடுமா என்பது விரைவில் தெரிந்துவிடும்.